காளான் வளர்ப்பில் அதிக மகசூல்!

இளைஞர்கள், மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காளான் வளர்ப்பு தொழிலில் அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய
காளான் வளர்ப்பில் அதிக மகசூல்!

அரியலூர்: இளைஞர்கள், மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காளான் வளர்ப்பு தொழிலில் அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் அழகுகண்ணன் வழங்கியுள்ள ஆலோசனைகள்:
காளான் வகைகள்: காளான்களில் சிப்பி, பால், மாட்டுக் காளான் ஆகிய ரகங்கள் உள்ளன. இதில் சிப்பிக் காளான் வளர்ப்பு முறையில் குழலை கிழக்கு மேற்காக அமைத்தால் வெப்பத்தை குறைக்கலாம். அதேபோல் சிறிய அளவில் சாகுபடி செய்ய தென்னங்கீற்று வேய்ந்த குழலை பயன்படுத்தலாம். காளான் குழல் கான்கிரீட்டாக இருந்தால் இரு சுவர்கள் கொண்டதாக இருக்க வேண்டும். இரு சுவர்களின் நடுவில் ஆற்று மணல் நிரப்ப வேண்டும். காற்றோட்டத்திற்கு ஜன்னல்கள் இரண்டு அமைக்க வேண்டும். ஒரு அறையை வளர்க்கவும், மற்றொன்றை படுக்கை தயார்படுத்த பயன்படுத்த வேண்டும்.
குழல்களில் 20 -280 டிகிரி வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் இருப்பது அவசியம். அறையின் ஜன்னல்களுக்கு 35 டிகிரி அளவுள்ள நைலான் வலைகளைப் பொருத்தி காளான்களைத் தாக்கக்கூடிய ஈக்கள் உட்புகாமல் தடுக்கலாம். குழலின் உள்புறம் தரையிலிருந்து குறைந்தபட்சம் அரை அடி உயரத்திற்கு ஆற்று மணல் இட வேண்டும். மேற்கண்டவாறு குழலை அமைத்து பராமரிப்பது நல்லது.
முக்கியமான நிலைகள்: முதலில் நன்கு சுத்தமான வைக்கோலைத் தேர்வு செய்து, அதனை குளிர்ந்த நீரில் சுமார் 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்ட வேண்டும். ஊற வைத்த வைக்கோலை 20 நிமிடம் நீராவி வெப்பத்தில் தொற்று நீக்கம் செய்து, வைக்கோலை நீரில் உலர்த்த வேண்டும் ஆனால் வைக்கோலின் ஈரப்பதம் 60 சதவீத அளவிற்கு உலர்த்த வேண்டும். தற்பொழுது படுக்கை தயாரிக்க வைக்கோல் தயாராகிவிட்டது.
காளான் விதை தயார்படுத்தும்போது, முதலில் நாம் தரமுள்ள காளான் விதையைத் தேர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் காளான் பண்ணைகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் காளான் விதைகள் கிடைக்கும். காளான் விதையைச் சுத்தம் செய்யப்பட்ட தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாலித்தீன் பை தயார்படுத்தி, காளான் வைக்கோலைச் நன்கு சுற்ற வேண்டும். இவ்வாறு சுற்றிய வைக்கோலை பாலித்தீன் பையின் உள்ளே வைத்து சுமார் 15 முதல் 20 கிராம் காளான் விதைகளை வைக்கோல் மீது ஓரமாக தூவ வேண்டும்.
இரண்டாம் அடுக்காக வைக்கோலைச் சுற்றிபின் மறுபடியும் காளான் விதையை படுக்கை ஓரங்களில் அதிக அளவில் தூவ வேண்டும். மேலே குறிப்பிட்டதை போல 5 அடுக்கு வைக்கோலும், 6 அடுக்கு விதையும் இருக்குமாறு படுக்கையை தயார் செய்ய வேண்டும். முடிவில் காளான் வித்துக்கள், வைக்கோலுக்கு தொடர்பை ஏற்படுத்த நன்கு அழுத்தி பையின் மேற்புறத்தில் நூலில் கட்ட வேண்டும். பின்னர் இரும்பு கம்பி மூலம் 10 முதல் 12 துளைகள் இடவேண்டும். 
தற்போது தேவையான படுக்கை தயாராகிவிட்டது. தயாரித்த படுக்கைகளைக் காளான் குழலில் தொங்கவிட்டு பராமரிக்க வேண்டும். காளான் படுக்கைகளை காளான் வளர்ப்புக்கென்று தயார் செய்த அறையில் வைத்து தகுந்த நேர்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வெண்டும். அதன்பிறகு நான்கு கட்டங்களாக அறுவடை செய்யலாம். ஒரு படுக்கையிலிருந்து (45 நாள்களுக்குள்) 700 கிராம் முதல் 1 கிலோ வரை காளான் கிடைக்கும். காளான் வளர்ப்பில் மேற்கொண்ட வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com