அதிக மகசூலும், தரமான விதையும்!

பயறு வகைகளில் தரமான விதை தயாரிப்புக்கு மூலவிதையின் தரமே முக்கிய காரணியாக விளங்குகிறது. அதிக மகசூலுக்கு மூலாதாரமாக விளங்கும் விதையை தரமான முறையில் தயாரிப்பது
அதிக மகசூலும், தரமான விதையும்!

மேலூர்: பயறு வகைகளில் தரமான விதை தயாரிப்புக்கு மூலவிதையின் தரமே முக்கிய காரணியாக விளங்குகிறது. அதிக மகசூலுக்கு மூலாதாரமாக விளங்கும் விதையை தரமான முறையில் தயாரிப்பது குறித்து மதுரை வேளாண் அறிவியல் மையம் கூறும் ஆலோசனைகள்:
விதையின் முக்கியத்துவத்தை விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில், கடந்த 60 வருடங்களாக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, விதை பெருக்கம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில், தரமான விதைகளை விவசாயிகள் தேர்வுசெய்து பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். அதிக மகசூலுக்கு விதையே மூலாதாரமாக விளங்கி வருகிறது.
இதனால், விதையின் தேவை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயிகள் தரமான விதை தயாரிப்பு தொழில்நுட்பங்களை அறிந்து, வேளாண். விஞ்ஞானிகளின் ஆலோசனையுடன் பயறுவகைகளின் விதை உற்பத்தியில் ஈடுபடலாம். இதன்மூலம், குறைந்தநாளில், நிறைய லாபத்தை விவசாயிகள் ஈட்டமுடியும். கோடைவெப்பம், குறைந்துவரும் நிலத்தடி நீர்வளம், அதிகரித்து வரும் நீர்த்தேவை, சாகுபடிச் செலவுகளையும் குறைக்கும் வகையில், பயறுவகைகள் விதை உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபடவேண்டும்.
வேளாண். உற்பத்தியில் தரமான விதை, வளமான மண் வகையினையும் பயன்படுத்துவதால் மொத்த மகசூலில் 20 சதம் வரை அதிகரிக்கிறது. இதற்கு மூலவிதையை தேர்வுசெய்யும்போது, தன்மகரந்தச் சேர்க்கை பயிர்களில் 20 சதமும், அயல்மகரந்தச் சேர்க்கை பயிர்களில் 35 சதமும் வீரியஒட்டுரக பயிர்களில் 100 சதமும் சான்றிதழ்பெற்ற விதையை பயன்படுத்த வேண்டும்.
மேலும், இந்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விதைச்சான்று அளிப்புத் தரத்துக்கு ஏற்ற புறத்தூய்மை, வினையியல் திறன், முளைப்புத் திறன், மரபுத்தூய்மை விதை நலம் வீரியத்தையும் கொண்டுள்ளதாக இருப்பதே தரமான விதையாக நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய தரமான விதைகளைப்பெற விதைஉற்பத்தி தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
விதை உற்பத்தி என்பது வேளாண்.பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்களில் இருந்து மிகவும் மாறுபட்டது. விதை உற்பத்தியானது விதைப்பு முதல் அறுவடை வரையிலும் உயரிய தொழில்நுட்பங்களை கையாளுவதுடன் தகுந்த ஆய்வாளர்களின் மேற்பார்வையுடன் விதை உற்பத்தி செய்யப்படவேண்டும்.
நிலம் தயாரிப்பு: பயறுவகை விதை உற்பத்திக்கு நிலம் நன்கு புழிதியாக உழவு செய்யப்படவேண்டும். பயிர்களின் ரகத்துக்கேற்ப செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளியும் பாருக்குப் பார் 45 செ.மீ. இடைவெளியும் அவசியம் வேண்டும். பயறுவகைக்கு ஏக்கருக்கு அடியுரமாக தொழுஉரம் 5 டன், யூரியா 20 கிலோ, சூப்பர்பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடவேண்டும். உரத்தை பார்களின் பக்கவாட்டில் போடவேண்டும்.
விதைநேர்த்தி: விதை சான்றுபெற்றதாக இருக்க வேண்டும். உளுந்து, பாசிப்பயறு ஏக்கருக்கு 8 கிலோ, ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி இமிடாகுளோபிரிட் மருந்தைக் கொண்டு ஒருமித்த விதை நேர்த்தி செய்தால், விதை முளைத்த பின்னர் தெளிக்க வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்கலாம். விதை நேர்த்தியால் 30 நாள்கள் வரை மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தலாம். ஒருமித்த விதை நேர்த்தியின் காரணமாக மகசூலில் 15 சதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தரமானவிதை தனது பாரம்பரிய குணங்களில் இருந்து குறைவுபடாமலும், விதைத்தவுடன் நன்கு முளைத்து செழிப்பாக வளரும். இதுவும் அதிக மகசூலுக்கு அடிப்படையானது. தோட்டத்தில் களை, பிறரக கலப்பு, பிற பயிர்கள் விதை கலப்பில்லாமலும் நோய் தாக்குதல் இல்லாமலும் பாதுகாக்கவேண்டும். உளுந்து பாசிப்பயிறு போன்றவை தன்மகரந்த சேர்க்கை பண்புடையவை. எனவே, பிற பயிர்கள் 5 மீட்டருக்கும் அப்பால் இருக்க வேண்டும். விதை முதிர்ச்சியடையும்போது அதிக மழையும், அதிக வெயிலும் இல்லாமலிருப்பது அவசியம்.
நீர் மேலாண்மை: விதைப்புடன் நீர்விடவேண்டும். பின்னர் மூன்றாம்நாள் உயிர் நீர் விட வேண்டும். பிறகு மண்ணின் நீர்செழிப்புக்கேற்ப நீர்பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும், ஈரப்பதம் பேணும் வகையில் நீர்பாய்ச்ச வேண்டும். களை கட்டுப்பாட்டுக்கு 15 நாளில் ஒருமுறையும் அடுத்த 15 நாளில் மற்ùôரு முறையும் களையெடுக்கவேண்டும். 
பயிர்ஊக்கி: பயறுவகைச் செடிகளில் பூக்கள் அதிகம் உதிர்ந்துவிடும். இதனால், உற்பத்தி குறைவு ஏற்படும். இதைதவிர்க்க பூ பூக்கும் தருணத்தில் லிட்டர் நீருக்கு 4 மில்லி அளவில் பிளோனோபிக்ஸ் என்ற பயிர்வளர்ச்சி ஊக்கியை செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்கவேண்டும். பூச்சி பூஞ்சாண நோய்களால் செடிகள் பாதிக்காதவாறு பாதுகாப்பதே தரமான விதை உற்பத்திக்கு மூலாதாரமாகும். காய்ப்பு பருவத்தில் செடி வளர்ச்சி குன்றி கருகினால், லிட்டர் நீரில் 1 கிராம் கார்பன்டைசிம் கரைசலைக் கலந்து செடிகளின் வேரில் ஊற்ற வேண்டும்.
அறுவடை: காய்கள் நன்கு முற்றி கருப்பேறியதும் அறுவடை செய்யவேண்டும். காய்களை இரண்டு நாள்கள் நிழலில் உலர வைத்து மூங்கில் குச்சியால் அடித்து விதைகளைப் பிரிக்க வேண்டும். பின்னர், விதைகளை வெயிலில் காயவைத்து பாதுகாக்க வேண்டும். விதை உற்பத்தியில் மதுரை வேளாண். அறிவியல் மையம் விவசாயிகளுக்கு தேவையான நுட்பங்களையும், உதவிகளையும் வழங்கும் என மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com