உழவன் செயலி: விரல் நுனியில் வேளாண் தகவல்

உழவன் செல்லிடப்பேசி செயலியில் விரல் நுனியில் வேளாண் தகவல்கள் கிடைப்பதால், அந்த செயலி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உழவன் செயலி: விரல் நுனியில் வேளாண் தகவல்

உழவன் செல்லிடப்பேசி செயலியில் விரல் நுனியில் வேளாண் தகவல்கள் கிடைப்பதால், அந்த செயலி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக வேளாண் துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அண்மையில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட உழவன் செயலி, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ளது. ஸ்மார்ட் போனும், இணைய வசதியும் இருந்தால்போதும், கூகுள் பிளே ஸ்டோரில் சென்று உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் விவசாயிகள் எல்லா தகவல்களையும் வீட்டில் இருந்தபடியே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
9 விஷயங்கள்: இந்த செயலியில் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன்அறிவிப்பு, உதவி வேளாண் அதிகாரி வருகை ஆகிய 9 வகையான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
மானியத் திட்டங்கள்: மானியத் திட்டத்தில் விதைகள், பண்ணை இயந்திரங்கள், சூரிய சக்தி பம்ப்செட், நிழல் வலை குடில், பசுமை குடில், சிப்பம் கட்டும் அறை, உயர்தர நாற்றங்கால், சிறிய நாற்றங்கால், புதிய திசு வளர்ப்புக் கூடம், பறவை தடுப்பு வலை, பிளாஸ்டிக் நில போர்வை, தேனீ பெட்டிகள், முன்குளிர்விப்பு அறை, குளிரூட்டப்பட்ட வாகனம், நகரும் விற்பனை வண்டி, வெங்காய சேமிப்பு கிடங்கு, காளான் வளர்ப்பு, நுண்ணீர் பாசனம், பழுக்க வைக்கும் அறை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் எந்தப் பொருளுக்கெல்லாம் மானியம் உள்ளது, எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். 
உதாரணமாக, ஒரு பகுதியைச் சேர்ந்த விவசாயி, தான் வசிக்கும் பகுதியை குறிப்பிட்டு அங்கு என்னென்ன பொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து அதைப் பெற முடியும்.
இடுபொருள் முன்பதிவு: உரம், விதை, பூச்சிமருந்து உள்ளிட்ட இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்காக முன்பதிவு செய்துகொள்ளலாம். 
பயிர்க் காப்பீடு: பாரத பிரதமரின் பயிர்க் காப்பீடு கட்டணம், காப்பீட்டு தொகை கட்டுவதற்கான கடைசி தேதி, எங்கெல்லாம் பயிர்க் காப்பீடு செய்யப்படுகிறது, அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை, இழப்பீடு எப்போது வரும், இழப்பீடு கோரிய விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
உரங்கள் இருப்பு நிலை: ஒவ்வொரு விவசாயியும் தங்கள் பகுதியில் என்னென்ன உரங்கள் இருப்பு உள்ளது, எந்தெந்த கடைகளில் உரங்கள் உள்ளன என்பதை கண்டறியலாம். அதன் விலை நிலவரங்களையும் அறிந்துகொள்ளலாம். மேலும் அந்தக் கடைகளைத் தொடர்புகொள்வதற்காக செல்லிடப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
விதை இருப்பு நிலை: ஒவ்வொரு விவசாயியும் தங்கள் பகுதியில் உள்ள அரசு வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, தனியார் நிறுவனங்களில் என்னென்ன விதைகள் கிடைக்கும் என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
வேளாண் இயந்திரம் வாடகை: வேளாண் இயந்திரங்களுக்கான வாடகை மையம் எங்குள்ளது, அங்கு என்னென்ன இயந்திரங்கள் உள்ளன, நமக்குத் தேவையான இயந்திரம் எப்போது கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும். மேலும் வாடகை மையத்தை தொடர்பு கொள்வதற்கான செல்லிடப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரம்: மாவட்ட, வட்ட வாரியாக சந்தைகளில் வேளாண் பொருள்களின் விலை குறித்து அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் விலையேறும் நேரங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்று அதிக லாபம் பெற முடியும்.
வானிலை முன்னறிவிப்பு: ஒவ்வொரு விவசாயியும் தங்கள் பகுதியின் அடுத்த 4 நாள்களுக்கான வானிலை முன்அறிவிப்பை தெரிந்துகொள்ள முடியும்.
உதவி வேளாண் அலுவலர் வருகை: ஒவ்வொரு விவசாயியும் தங்கள் பகுதிக்கு வேளாண் அலுவலர் எப்போது வருவார், அந்த அதிகாரியின் பெயர் என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்த அதிகாரியின் செல்லிடப்பேசி எண்ணையும் தெரிந்துகொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com