பெங்களூரில் மழை பாதிப்பு: எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் துணை முதல்வர் ஆலோசனை

பெங்களூரில் ஏற்பட்ட மழை பாதிப்பு தொடர்பாக,   மக்களவை, மாநிலங்களவை,  சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரில் ஏற்பட்ட மழை பாதிப்பு தொடர்பாக,   மக்களவை, மாநிலங்களவை,  சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.
மழை பாதிப்பு குறித்து பெங்களூரைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேயர், துணைமேயர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெங்களூரு விதானசெளதாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் பேசியது: -
கடந்த ஆண்டுகளில் பெங்களூரில் பெய்த மழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு, மழை பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். 
இந்த நிலைமை நிகழாண்டின் மழைக்காலத்தில் நிகழக் கூடாது. ராஜகால்வாய்களில் குழந்தைகள், பெரியவர்கள் வரை யாரும் அடித்துச் செல்லாத வகையில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இதேபோல்,  கழிவுநீர்க் கால்வாய்களில் மழை வெள்ளம் வெளியேறாமல் தடையின்றி ஓடும் வகையில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தற்போதே மேற்கொள்ள வேண்டும். 
தாழ்வான பகுதிகளில் மழை, வெள்ளம் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஏரி, ராஜகால்வாய் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பெங்களூரில் மாமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் குப்பை பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  மக்கள் பிரதிநிதிகள்  பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் வளர்ச்சித் திட்டப் பணிகளில் அரசியலை மறந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். 
பெங்களூரு மாநகரில் குற்றங்கள் குறையவும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வீடுகள் கட்ட அனுமதி பெற்று, அதனை வணிகத்துக்காகப் பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, எச்சரிக்க
வேண்டும்.
வணிகத்தைத் தொடர்ந்தால் அதுபோன்ற கட்டடங்களை அடையாளம் கண்டு, அந்த கட்டடங்களின் வணிகங்கள் நடைபெறாமல் தடுக்கவும், வணிகத்துக்கு வழங்கப்படும் உரிமங்களை வழங்காமல் தடுக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பெங்களூரை சர்வதேச அளவில் சிறந்த மாநகரமாக ஆக்க அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com