"மாணவர்களின் காதல் பிரச்னைகளுக்கு செல்லிடப்பேசியே காரணம்'

மாணவர்களின் காதல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு செல்லிடப்பேசி தொடர்புகளே முக்கிய காரணமாக உள்ளதாக கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமிபாயி தெரிவித்தார்.

மாணவர்களின் காதல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு செல்லிடப்பேசி தொடர்புகளே முக்கிய காரணமாக உள்ளதாக கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமிபாயி தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் புதன்கிழமை மகளிர் மேம்பாடு குறித்த பார்வை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியது: 
மாணவர்கள் செல்லிடப்பேசிகள் மூலம் காதல் செய்து, பின்னர் அதனால் ஏற்படும் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, புகார் அளிக்க வருவது அதிகரித்து வருகிறது. செல்லிடப்பேசி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் ஆக்கபூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
இளம் வயதிலேயே பிரச்னைகளை எதிர்கொண்டால், எதிர்காலம் வீணாகிவிடும். கல்வி அறிவு அதிகரித்துள்ள நிலையில், கலாசாரம் சீர்குலைந்து வருவது வேதனை அளிக்கிறது. பெங்களூரு தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரமாக விளங்குகிறது. ஆனால், அங்கு பணி செய்யும் மென்பொறியாளர்களில் 80 சதவீதம் பேர் விவாகரத்துக் கோரி ஆணையத்துக்கு வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
ஜாதி சான்றிதழில் தந்தையின் பெயருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி தாயின் பெயருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசியல் சாசனத்தின் ஆண்களுக்கு சமமான உரிமையை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
என்றாலும் சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கம் தொடருவது வாடிக்கையாகியுள்ளது. அண்மைக்காலமாக வீடுகளில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார். 
நிகழ்ச்சியில் மல்லேஸ்வரம் மகளிர் சங்கத்தின் துணைத் தலைவர் சைலஜாசீனிவாசன், ஹையர் லர்னிங் அகாதெமியின் முதல்வர் பத்மஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com