பாஜக எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் வியூகம்

பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது.

பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் பாஜக மற்றும் மஜத-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நிலவிவருகிறது. பாஜகவிடம் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், 222 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 112 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க இயலும். இந்நிலையில், ஆட்சி அமைக்க உரிமைக்கோரியுள்ள பாஜக, ஒருவாரம் கால அவகாசம் அளித்தால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூப்பதாக அக்கட்சியின் மாநிலத்தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 10 பேரை தொலைபேசி வழியாக பாஜக அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மஜத எம்எல்ஏக்களை இழுக்க ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவியை காட்டி பாஜக பேரம் பேசுவதாக மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
ஒருவேளை, மஜத எம்எல்ஏக்களை இழுத்தால், அதற்கு இரு மடங்கான எம்எல்ஏக்களை பாஜகவில் இருந்து தான் இழுப்பேன் என்று குமாரசாமி சவால்விட்டிருந்தார். இந்நிலையில், தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ள காங்கிரஸ், பாஜகவுக்குப் பதிலடிகொடுக்கும் வகையில் அக்கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க வியூகம் அமைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை இதுகுறித்து ஜி.பரமேஸ்வர் மற்றும் டி.கே.சிவக்குமார் விவாதித்துள்ளனர். பாஜக எம்எல்ஏக்களை இழுக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாரிடம் கட்சி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம்.பி.பாட்டீல், தன்னிடம் 6 பாஜக எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாகவும், வெகுவிரைவில் காங்கிரஸில் சேரவிருப்பதாகவும் கூறினார். இது பாஜகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com