உள்கட்சி பிரச்னையில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழுமா?

கர்நாடகத்தில் அரசியல் பலம் வாய்ந்த ஜார்கிஹோளி சகோதரர்களால் ஏற்பட்டுள்ள காங்கிரஸ் உள்கட்சி

கர்நாடகத்தில் அரசியல் பலம் வாய்ந்த ஜார்கிஹோளி சகோதரர்களால் ஏற்பட்டுள்ள காங்கிரஸ் உள்கட்சி பிரச்னையால் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ் ஜார்கிஹோளி. இவரது சகோதரர் சதீஷ் ஜார்கிஹோளி, முந்தைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராகப் பதவிவகித்தவர். 
மேலும் கடந்த 20 ஆண்டுகளாகவே பெலகாவி மாவட்டத்தின் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜார்கிஹோளி சகோதரர்கள் இருவரும் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பவர்கள். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் என்ன நடந்தாலும் அதில் தங்களது செல்வாக்கை செலுத்தும் வல்லமைப் படைத்தவர்கள். மேலும், மாவட்ட நிர்வாகத்திலும் தலையிடக்கூடிய அரசியல் செல்வாக்கு மட்டுமல்லாது மக்கள் செல்வாக்கு படைத்தவர்கள். பிரச்னை தொடங்கியது
இந்த நிலையில், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்பட்ட லட்சுமி ஹெப்பாள்கர், நீர்வளத் துறை அமைச்சர்டி.கே.சிவக்குமாரின் ஆதரவில் அண்மைக்காலமாக பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார். இது ஜார்கிஹோளி சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும்,  அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லட்சுமி ஹெப்பாள்கர் வெற்றி பெற்றதன் மூலம்  கட்சியில் அவரது செல்வாக்கை பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக பயன்படுத்தத் தொடங்கினார். 
பனிப்போர்
இது ஜார்கிஹோளி சகோதரர்களை எரிச்சலடையச் செய்தது. இருதரப்பினருக்கும் இடையே மூடுபனியாக இருந்து வந்த அரசியல்மோதல், அண்மையில் நடைபெற்ற மாவட்ட நில வள வங்கி தலைவர் பதவிக்கான தேர்தலில் வெடித்தது.  இத் தேர்தலில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் ஜார்கிஹோளி சகோதரர்கள் மற்றும் லட்சுமி ஹெப்பாள்கர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதுபெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியை கலங்கடிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து, இந்த பிரச்னையைத் தீர்க்குமாறு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு கட்சி மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டார்.
கட்சித் தாவல்?
இதனிடையே, தங்கள் கோரிக்கைக்கு காங்கிரஸ் செவிமடுக்காத நிலையில் ஜார்கிஹோளி சகோதரர்கள் தனக்கு ஆதரவான 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு தாவவிருப்பதாகவும், அதுகுறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பும் செப்.16-ஆம் தேதி அறிவிக்கப்போவதாகவும் செய்தி பரவத் தொடங்கியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவில் விறுவிறுப்பான பல அரசியல் முன்னெடுப்புகள் நடந்துவருகின்றன. 
சமரசம்
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் இருவரும் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உள்ளாட்சித் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் காணப்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ரமேஷ் ஜார்கிஹோளிக்கு உறுதி அளித்ததோடு, அவசரப்பட்டு கூட்டணி அரசுக்கு பாதகமான எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்று தினேஷ் குண்டுராவ், ஜி.பரமேஸ்வர் கேட்டுக் கொண்டனர். 
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், "காங்கிரஸ் கட்சியில் எவ்வித பிரச்னையும் இல்லை. ரமேஷ் ஜார்கிஹோளி அல்லது வேறு எந்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக பொய்பிரசாரத்தை செய்துவருகிறது.கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. அந்த முயற்சி ஈடேறாது' என்றார்.
பாஜகவில் உற்சாகம்
பெங்களூரில் உள்ள ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா வீடுகளில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் ஏராளமான அரசியல் நடவடிக்கைகள் நடந்தவண்ணம் இருந்தது. இது, ஜார்கிஹோளி சகோதரர்கள் தங்களுக்கு நெருக்கமான 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ தயாராகியுள்ளதை உறுதி செய்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 
ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க ஸ்ரீராமுலு மூலம் பாஜகமுயற்சித்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
ஜார்கிஹோளி சகோதரர்கள் மற்றும்பாஜக முகாம்களில் காணப்படும் சுறுசுறுப்பை கவனித்தால், அடுத்த 15 நாள்களில் அரசு கவிழும் என்று பாஜக கூறிவருவதை நம்பமுடியாமல் இருக்கமுடியவில்லை என்று அரசிய நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆதரவு எம்எல்ஏக்கள்!
அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சகோதரர்களுக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படும் 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பெயர்கள் வருமாறு (பெயரும், தொகுதியும்): வி.நாகேந்திரா(பெல்லாரி ஊரகம்), ஆனந்த்சிங்(விஜயநகர்), துக்காராம்(சந்தூர்), அமரேகெளடாபய்யாபூர்(குஷ்டகி), பிரதாப்கெளடா பாட்டீல்(மஸ்கி), நாராயண்ராவ்(பசவகல்யாண்), ஸ்ரீமந்த்பாட்டீல்(ககவாடா), நாகேஷ்(முல்பாகல்), மஹந்தேஷ் குமதள்ளி(அதானி), சதீஷ்ஜார்கிஹோளி(எமகனமரடி), டி.எஸ்.ஹுலிகேரி(லிங்கசுகூர்), ரமேஷ்ஜார்கிஹோளி(கோகாக்), பசவனகெளடா தத்தால்(ராய்ச்சூரு ஊரகம்), எம்.டி.பி.நாகராஜ்(ஹொசகோட்டே). 
இவர்களில் நாகேந்திரா, பிரதாப்கெளடாபாட்டீல், பய்யாப்பூர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேரப்போவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்கள்.


அரசியலில் எதுவும் நடக்கலாம்
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் அவரது சகோதரர் சதீஷ்  ஜார்கிஹோளி ஆகியோர் பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தி வரும்  நீர்வளத் துறை அமைச்சர்டி.கே.சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏ லட்சுமி ஹெப்பாள்கரைக் கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.
ஜார்கிஹோளி சகோதரர்கள்மற்றும் லட்சுமி ஹெப்பாள்கருக்கு இடையே நடந்துவரும் பனிப்போர், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பாதகமாக அமையலாம் என்று கருதப்படுகிறது.
இதனிடையே, பெங்களூரில் செவ்வாய்க்கிழமை சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், "காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் எண்ணம் எனக்கில்லை. பெலகாவி மாவட்ட காங்கிரஸில் நிலவும் பிரச்னையை கட்சி மேலிடம் தீர்த்துவைக்கும் நம்பிக்கை உள்ளது.
ரமேஷ் ஜார்கிஹோளிக்கு ஆதரவாக 10-க்கும்மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருப்பது உண்மைதான். எனது தரப்பில் கூட்டணி கட்சிக்கு எந்த பாதிப்பும் வரவாய்ப்பில்லை. ஆனால், ரமேஷ் ஜார்கிஹோளி தரப்பில் என்ன செய்வார்கள் என்றுதெரியவில்லை. அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இந்த பிரச்னையை காங்கிரஸ் தீர்க்காவிட்டால் அடுத்த 15 நாள்களில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல' என்றார்.
லட்சுமி ஹெப்பாள்கரை, மாநிலமகளிர் காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்குவதோடு, பெலகாவி மாவட்டத்தில் நடக்கும் தேர்தல்களில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதையும், மாவட்ட அமைச்சராக யாரை நியமிப்பது என்பதையும் தாங்கள்தான் முடிவுசெய்வோம். 
அதற்கு உடன்பட்டால் சமரசம் செய்துகொள்வதாக ஜார்கிஹோளி சகோதரர்கள், காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியிருக்கிறார்கள். அடுத்த முதல்வர் வேட்பாளராக சதீஷ் ஜார்கிஹோளியை முன்னிலைப்படுத்திவரும் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, தனது விருப்பத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியிருப்பதாகக் தெரிகிறது. அதற்கு வசதியாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சதீஷ் ஜார்கிஹோளியை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதை முழுமையாக மறுத்திருக்கும் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி,"பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரத்தில் இருந்து டி.கே.சிவக்குமாரை விலக்கிவைக்க வேண்டும். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் டி.கே.சிவக்குமார் அவசியமில்லாமல் தலையிடுகிறார். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் பணியிடமாற்றத்திலும் அவரது தலையீடு இருக்கிறது. பெலகாவி மாவட்டத்தில் நாங்கள்தான் கட்சியை நடத்துவோம். இதில் யாருடைய தலையீட்டையும் நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம்' என்றார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தான் காரணமல்ல என்று கூறியிருக்கும் அமைச்சர் டி.கே.சிவக்குமார், "சதீஷ் ஜார்கிஹோளி, தீவிர காங்கிரஸ் தொண்டர். பெலகாவியில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களுக்கு என்னை அவர் அழைத்திருக்கிறார். அவரது வேண்டுகோளை நான் எப்போதும் தட்டியதில்லை. அவருக்கு உதவுவதே என் நோக்கம். அவர் மிகப்பெரிய தலைவர். கட்சிக்கு அவர் மிகப்பெரிய சொத்து. 
பெலகாவி காங்கிரஸ் விவகாரங்களில் நான் தலையிட்டதில்லை. நான் தலையிடுவதாக அவர்கள் கூறுவதில் உண்மையில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com