அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியின் கன்னத்தை தடவிக் கொடுத்த முதல்வர்

காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி உயர்த்தியுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளியின் கன்னத்தை முதல்வர் குமாரசாமி

காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி உயர்த்தியுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளியின் கன்னத்தை முதல்வர் குமாரசாமி செல்லமாக தடவிக் கொடுத்தது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் ரமேஷ்ஜார்கிஹோளி மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சதீஷ்ஜார்கிஹோளி இருவரும், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவருமான லட்சுமி ஹெப்பாள்கர் மற்றும் பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான டி.கே.சிவக்குமாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
பெலகாவி மாவட்ட காங்கிரஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் தலையீடு நிறுத்த வேண்டும். லட்சுமி ஹெப்பாள்கரை மாநில மகளிர் காங்கிரஸ் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சதீஷ்ஜார்கிஹோளியை கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜார்கிஹோளி சகோதரர்கள் முன்வைத்துள்ளனர். இதை செய்யத் தவறினால், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 14 பேருடன் எந்த முடிவையும் எடுப்பேன் என்று உள்ளாட்சி அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி தெரிவித்திருந்தார். இது மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்தாக முடியும் என்று கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஒருநாள் பயணமாக பெலகாவிக்கு சனிக்கிழமை சென்ற முதல்வர் குமாரசாமி, பெங்களூரில் இருந்து சாம்பா விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். மலர்க்கொத்தை புன்னகையோடு வாங்கிக்கொண்ட முதல்வர் குமாரசாமி, ரமேஷ்ஜார்கிஹோளியின் தாடையை பிடித்துக் கொஞ்சினார். அதன்பிறகு, மற்றவர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்வர் குமாரசாமி, இடையிடையே ரமேஷ்ஜார்கிஹோளி பேசுவதைகேட்டுக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில், தனது இருகைகளையும் ரமேஷ்ஜார்கிஹோளியின் இருகன்னங்களில் வைத்து செல்லமாக தடவிக் கொடுத்த முதல்வர் குமாரசாமி, அவரது தலையை கொஞ்சலாக ஆட்டினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி, சற்று வெட்கி தலைகுனிந்து அமைதியானார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை மட்டுமல்லாது, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
ஆட்சியைக் கவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் குமாரசாமி செல்லமாக கொஞ்சியது, ரமேஷ்ஜார்கிஹோளியின் கோபத்தை தணித்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இதனிடையே, அரசியல் பனிப்போரில் ஈடுபட்டு வரும் சதீஷ்ஜார்கிஹோளியும் லட்சுமி ஹெப்பள்கரும் கடந்த ஒரு மாத காலமாகவே பரஸ்பரம் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். இனிமேல் இருவரும் சேரமுடியாத நிலை உருவாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பெலகாவியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் சதீஷ்ஜார்கிஹோளியும், லட்சுமி ஹெப்பாள்கரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் இருவரும் பொது நிகழ்ச்சியில் அருகருகே அமர்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம்பேசிய சதீஷ்ஜார்கிஹோளி, காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள பிரச்னைக்கும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் அவர் செப்.16-ஆம் தேதி நாடு திரும்புகிறார். தற்போது எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக சித்தராமையாவிடம் பேசும் அவசியமில்லை. மேலும், டி.கே.சிவக்குமார் பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரத்தில் தலையிடமாட்டேன் என்று கூறியிருக்கிறார். பெலகாவி மாவட்டப் பிரச்னைக்கு கட்சிமேலிடம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com