தீபாவளி பட்டாசு விபத்து சம்பவ இடத்துக்கு 10 நிமிஷங்களுக்குள் செல்ல தீயணைப்புத் துறை தயார்

தீபாவளியையொட்டி சென்னையில் பட்டாசு விபத்துகளால் ஏற்படும் தீயை அணைக்க சம்பவ இடத்துக்கு 10 நிமிஷங்களுக்குள் செல்வதற்கு தீயணைப்புத் துறை தயாராகி வருகிறது.
தீபாவளி பட்டாசு விபத்து சம்பவ இடத்துக்கு 10 நிமிஷங்களுக்குள் செல்ல தீயணைப்புத் துறை தயார்

தீபாவளியையொட்டி சென்னையில் பட்டாசு விபத்துகளால் ஏற்படும் தீயை அணைக்க சம்பவ இடத்துக்கு 10 நிமிஷங்களுக்குள் செல்வதற்கு தீயணைப்புத் துறை தயாராகி வருகிறது. மேலும் 34 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. உதாரணமாக மாநிலம் முழுவதும் கடந்தாண்டு தீபாவளியன்று சுமார் 79 தீ விபத்துகள் ஏற்பட்டன.
இதையடுத்து, வரும் சனிக்கிழமை (அக்.29) தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளால் தீ விபத்துகள் ஏற்பட்டால் அதன் சேதத்தை குறைப்பதற்கு தீயணைப்புத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கியமாக பட்டாசு விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு 10 நிமிஷத்துக்குள் செல்வதற்கு தீயணைப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
34 புற தீயணைப்பு நிலையங்கள்: இதற்காக, சென்னையில் உள்ள 39 தீயணைப்பு நிலையங்களை தவிர்த்து 34 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் அதிகம் தீ விபத்துக்கள் ஏற்பட்ட பகுதிகள், மக்கள் நெரிசல் மற்றும் தீ விபத்து ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள பகுதிகளில் இந்தப் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த தீயணைப்பு நிலையங்களில் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 24 மணி நேரமும் 15 தீயணைப்பு வீரர்கள் பணியில் இருப்பார்கள். இந்த நிலையங்கள் தீபாவளிக்கு இரண்டு நாளுக்கு முன்பு இருந்து செயல்படத் தொடங்கி 4 நாள்கள் செயல்பாட்டில் இருக்கும். இது தவிர சிறியதாக ஏற்படும் தீயை அணைக்கவும், பெரிய தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு உடனடியாக சென்று அணைக்கவும் ஜீப் வடிவிலான 4 தீயணைப்பு வாகனங்களும், 8 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்களும் பயன்படுத்தப்படுகின்றன.
தீயை அணைக்க தண்ணீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ நிறுவனத்திடமிருந்து 50 தண்ணீர் லாரிகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் தலா 4,000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டவை. சென்னையில் சுமார் ஆயிரம் தீயணைப்புப் படை வீரர்கள் பணியில் இருக்கும் நிலையில், கூடுதலாக 20 ஓட்டுநர்கள் உள்பட 200 தீயணைப்புப் படை வீரர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுவதாக தீயணைப்புத் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறை: தீ விபத்து குறித்து தகவல்களைப் பரிமாறி கொள்வதில் சிரமமும், காலதாமதமும் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தீயணைப்புத் துறை, காவல் துறை,சுகாதாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் 2 தீயணைப்புப் படை வீரர்களும், அதேபோல் தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறையில் 2 காவலர்களும் பணியில்இருப்பார்கள்.
இவர்கள் மூலம் இரு துறைகளுக்கு இடையே தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். இதேபோல், அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்தில் காயமடைந்தோர் பற்றிய தகவல்களை உடனடியாக பெற அனைத்து மருத்துவமனைகளிலும் தீயணைப்புப் படை வீரர்கள் இருவர் பணியில் இருப்பார்கள் என தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com