தீபாவளி: வெளியூர்களுக்கு 5 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து கடந்த 3 நாள்களில் 5 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
சொந்த ஊர்களுக்கு செல்ல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோர்.
சொந்த ஊர்களுக்கு செல்ல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து கடந்த 3 நாள்களில் 5 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புதன்கிழமை முதல் (அக்.26) 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், புதன்கிழமை 1.35 லட்சம், வியாழக்கிழமை 1.86 லட்சம், வெள்ளிக்கிழமை 2 லட்சம் பயணிகள் என, மொத்தம் 5.25 லட்சம் பேர், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
எந்த ஆண்டும் இல்லாத... சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் தவிர 4 தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொண்டனர்.
வழக்கமாக தீபாவளிக்கு முதல் நாளன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு தாற்காலிக பேருந்து நிலையங்கள், அதிக அளவு சிறப்பு பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் இயக்கத்தைச் சீரமைத்த போலீஸார் -போக்குவரத்துத் துறையினர் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு பயணிகளுக்கு பேருந்துகளில் இடம் கிடைப்பதில் பிரச்னை ஏற்படவில்லை.
சுங்கச்சாவடிகளிலும்... தாற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து புறப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் நிற்காமல் விரைவாகச் செல்வதற்கு ஏதுவாக தனிப்பாதைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டன. இத்தகைய ஏற்பாடுகள் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சென்னையிலிருந்து அருகில் உள்ள இடங்களுக்கு... தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை (அக்.26), வியாழக்கிழமை (அக்.27) ஆகிய நாள்களில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு பெரும்பாலான பயணிகள் விரைவுப் பேருந்துகளில் சென்றனர்.
தீபாவளிக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை (அக்.28), மொத்த பயணிகள் 2 லட்சம் பேரில், சென்னைக்கு அருகே உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு 1.34 லட்சம் பேர் (67 சதவீதம்) சென்றதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய மூன்று நாள்களில் 4.90 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அதிக எண்ணிக்கையிலான பயணிகள் அதாவது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர்.
அமைச்சர் ஆய்வு: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம், பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

பயணிகளைத் தேடிய ஆம்னி பேருந்துகள்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.28) மிகவும் குறைவாக இருந்தது.
இதனால் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு வழக்கமான கட்டணத்தில் அழைத்துச் செல்வதாக ஆம்னி பேருந்துகளின் இடைத்தரகர்கள் சாலையில் நின்ற பயணிகளை அழைத்ததைப் பார்க்க முடிந்தது.
கடந்த இரு நாள்களாக (புதன், வியாழன்) அரசுப் பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாலும், வெள்ளிக்கிழமையன்று அரசு சிறப்பு பேருந்துகளில் மிகவும் எளிதாக இடம் கிடைத்ததாலும் ஆம்னி பேருந்துகளில் செல்வதை பெரும்பாலான பயணிகள் தவிர்த்தனர்.
4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட 12 குழுவினர் சென்ட்ரல், கிழக்கு கடற்கரைச் சாலை, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து 4 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத 100 -க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் குறித்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com