ரயில்வே அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களை வெகுவாய் கவர்ந்த ரயில் பெட்டி உணவகம்!

சென்னை புதிய ஆவடி சாலையில் உள்ள ரயில்வே அருங்காட்சியகத்தில் ரயில் பெட்டிகளை தயாரிக்கும்போது உருவாகும் கழிவுகளால் வடிவமைக்கப்பட்ட கண் கவர் சிற்பங்கள், ரயில் பெட்டி உணவகம்
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ரயில் பெட்டி உணவகம் (இடது), நவகிரக மாதிரிகள் (வலது).
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ரயில் பெட்டி உணவகம் (இடது), நவகிரக மாதிரிகள் (வலது).

சென்னை புதிய ஆவடி சாலையில் உள்ள ரயில்வே அருங்காட்சியகத்தில் ரயில் பெட்டிகளை தயாரிக்கும்போது உருவாகும் கழிவுகளால் வடிவமைக்கப்பட்ட கண் கவர் சிற்பங்கள், ரயில் பெட்டி உணவகம் ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
ரயில் போக்குவரத்தின் வரலாறு, முக்கியத்துவம், பாரம்பரியத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக ரயில் அருங்காட்சியகத்தில், பல நிகழ்வுகளை ரயில்வே நிர்வாகம் நடத்தி வருகிறது.
ரயில் பெட்டிகள் தயாரிக்கும்போது வீணாகும் கழிவுகளைக் கொண்டு கண் கவரும் சிற்பங்கள் அமைத்தல், தென்னக ரயில்வே குறித்த ஓவியக் கண்காட்சி, சேதமடைந்த பழைய ரயில் பெட்டியை பொதுமக்கள் அமர்ந்து உணவருந்தும் இடமாக வடிவமைத்தல் ஆகிய 3 அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
நிரந்தர கண்காட்சி: கழிவுகளால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களும், ரயில் ஓவியங்களும் அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். திங்கள்ழமை தவிர அனைத்து நாள்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பார்வையாளர்களைக் கவர்ந்த நவகிரகங்கள்: ஒரு டன் கழிவுகளைப் பயன்படுத்தி அருங்காட்சிய வளாகத்தில் சிற்பி ஜேக்கப் ஜெயராஜ் வரிசையாக அமைத்திருந்த நவகிரகங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதே வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உலக உருண்டை, சிறுவர் ரயில் போன்ற சிற்பங்களும் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தன. அதேபோன்று சேதமடைந்த ரயில் பெட்டி, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உணவருந்தும் கூடமாக மாற்றப்பட்டிருந்தது.
ஓவியக் கண்காட்சியில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த ஓவியர்கள், தென்னக ரயில்களின் தோற்றங்களை பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு வடிவங்களில் வரைந்தனர். பார்த்தவுடன் எளிதில் புரியும் ஓவியம், கற்பனைக்கேற்றவாறு புரிந்து கொள்ளும் ஓவியம் என இரு வகைகளில் அவை வரையப்பட்டிருந்தன.
கலைஞர்கள் கௌரவிப்பு: இதைத்தொடர்ந்து மாலையில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத் துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா, ஐசிஎஃப் பொது மேலாளர் எஸ்.மணி, கலாஷேத்ரா பேராசிரியர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிற்பிகள் இளங்கோ, ஜேக்கப் ஜெயராஜ், சைலேஷ், ஓவியர்கள் கீதா ஹுட்சன், தேஜோமயி மேனன், திலிப் செழியன், கிஷோர் ஷாகு, புஷ்பா சிங் உள்ளிட்டோரைப் பாராட்டி கௌரவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com