மோடியை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தவர்: "சோ' பற்றி இல. கணேசன்

மோடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் "துக்ளக்' ஆசிரியர் சோதான் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் பேசினார்.
சோ, சாவி, வாலி ஆகியோரின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன், பத்திரிகையாளர்கள் சுதாங்கன், மாலன், மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன், நடிகர்கள் சிவகுமார், சார்லி, பத
சோ, சாவி, வாலி ஆகியோரின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன், பத்திரிகையாளர்கள் சுதாங்கன், மாலன், மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன், நடிகர்கள் சிவகுமார், சார்லி, பத

மோடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் "துக்ளக்' ஆசிரியர் சோதான் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் பேசினார்.
சென்னை 40-ஆவது புத்தக கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மறைந்த பத்திரிகை ஆசிரியர்கள் சாவி, சோ கவிஞர் வாலி ஆகியோரின் 48 புத்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தப் புத்தகங்களை "அல்லயன்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன், நடிகர் சிவக்குமார், பத்திரிகையாளர்கள் மாலன், சுதாங்கன், துக்ளக் ரமேஷ், நடிகர் சார்லி, பத்திரிகையாளரும் சொற்பொழிவாளருமான மை.பா. நாராயணன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
இல. கணேசன் பேசியது: அவசரநிலை காலத்தின்போது துக்ளக் படிக்க தொடங்கினேன். அதன் பிறகு சோ மீதான ஆர்வம் ஏற்பட்டது. எந்த விஷயமானாலும் அதை ஆய்வு செய்வார்.
ஆய்வு முடிவில் சரி இல்லை என்றால் ஆதரவு அளிக்க மாட்டார். அதேவேளையில் சரி என்றால் எமனே எதிர்த்தாலும் ஆதரவு அளிப்பார்.ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றிய தவறான கருத்து பரப்பப்படுகிறது. இதுகுறித்து சோவிடம் நாங்கள் எப்படி இயக்குகிறோம் என்பதை எடுத்துரைத்தோம். தேசப்பற்றுடனும், தியாக உணர்வுடனும், நமது பண்பாட்டைக் காக்கும் நோக்கத்துடனும் நடத்தப்படுவதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பதை முழுமையாக விசாரித்து உணர்ந்தார் சோ. கடைசிவரை, துணிவுடன் ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்பாடுகளைப் பாராட்ட அவர் தயங்கியதே இல்லை.
மோடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் சோ. சோவை, பிரதமர் மோடி ராஜகுரு என்றுதான் அழைப்பார். அவரிடம் அவ்வளவு மரியாதை. அதேபோல மோடிக்கு அடுத்து பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்குத்தான் இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் அவர்.
சிங்கப்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஒருமுறை கலந்து கொண்டேன். அப்போது புத்தகத்தை வெளியிட்டவர், அதற்கான பணத்தை கொடுத்தே வாங்கினார். அதேபோல விழாவில் கலந்து கொண்டவர்களும் நூல்களை பணம் கொடுத்து வாங்கிச் சென்றனர். விழா முடிந்தபோது சுமார் 200 புத்தகங்கள் விற்பனையாகிவிட்டன. அதேபோன்ற நிலை தமிழகத்திலும் வர வேண்டும் என்றார் அவர்.
நடிகர் சிவக்குமார் பேசியது: சோ அரசியலில் இல்லை, அதிகாரத்திலும் இல்லை. ஆனால், அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்தவர். அவரை அரசியலுக்கு வரவழைக்க பலர் முயற்சி செய்தனர். ஆனால் அவர் வரவில்லை.
காந்தி, காமராஜர் விட்டு போன இடத்தில் யாரும் வரவில்லை. அது போன்றவர்கள்தான் சோ, ஆசிரியர் சாவி, கவிஞர் வாலி ஆகியோரும். இவர்களது இடம் நிரப்பப்படாமலே இருக்கும்.
மாலன் பேசியது: ""அவசரச் சட்டம் அமலில் இருந்த நேரம். பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டு வந்தது. எப்போதோ வெளிவந்த எம்.ஜி.ஆரின் "சர்வாதிகாரி' திரைப்படம் வடசென்னையில் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்திற்கு துக்ளக்கில் விமர்சனம் எழுதினார் சோ. விமர்சன முடிவில் சர்வாதிகாரம் கொடுமையானது. அதன் பின்னால் பெண் இருப்பது அதைவிட கொடுமையானது என்று மிகவும் சாதூர்யமாக எழுதியிருந்தார். தணிக்கை செய்யப்படாமல் அது வெளிவந்தது. நடிகனாக அறியப்படுவதைவிடத் தான் பத்திரிக்கையாளனாக அறியப்பட வேண்டும் என்று விரும்பியவர் அவர்.
நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி, வைத்தியநாதன், பத்திரிகையாளர்கள் சுதாங்கன், மை.பா. நாராயணன், துக்ளக் ரமேஷ், நடிகர் சார்லி ஆகியோர் சோ, சாவி, வாலி ஆகியோருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். "அல்லயன்ஸ்' பதிப்ப உரிமையாளர் ஸ்ரீநிவாஸன், சொற்பொழிவாளர் பி.என். பரசுராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com