காணும் பொங்கல்: சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: மெரீனாவில் கடலில் குளிக்க தடை

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
விழாவை முன்னிட்டு மெரீனா பகுதியில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாள்களே இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டன.
போகிப் பண்டிகை வெள்ளிக்கிழமையும், மறுநாளான 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து வரும் 16-ஆம் திங்கள்கிழமை காணும் பொங்கல் அன்று, பொதுமக்கள் கடற்கரை, பொழுது போக்கு பூங்காக்களிலும் அதிகளவில் கூடுவது வழக்கம். இதனால் அன்றைய தினம் மேற்கண்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக மெரீனா கடற்கரையில் காணும் பொங்கல் அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். அன்றைய தினம் மாலை கடற்கரை முழுவதும் பொதுமக்களின் கூட்டம் கட்டுங்கடங்காத அளவுக்கு இருக்கும். இதேபோன்று பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கேளிக்கை பூங்காக்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மெரீனாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளது. அங்கு தாற்காலிகமாக ஒரு காவல் கட்டுப்பாட்டு அறையும், காவல் உதவி மையமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வியாழக்கிழமை (ஜன.12) தொடங்கவுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெரீனாவில் உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் மணல் பரப்பில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் நின்றபடி, 3 போலீசார் கூட்டத்தை கண்காணிப்பார்கள்.
காணும் பொங்கல் நாளில் இளைஞர்கள் உற்சாக மிகுதியில் கடலில் இறங்கி குளிப்பார்கள். அப்போது ஆபத்தை உணராமல் ஆழ்கடலுக்குள் சென்று அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறும். இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுப்பதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட உள்ளன. குதிரைப்படை வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். போலீசார் கடற்கரை மணலில் எளிதாக செல்லக்கூடிய 10 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து சுற்றி வருவார்கள்.
இதே போல பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்படுகிறது. தியேட்டர்கள், வணிக வளாகங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com