விரைவில் வரன்முறை திட்டம் அமல்: விதிமீறல் கட்டடங்கள் அமலாக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்குமா?

விதிமீறல் கட்டடங்களுக்கான புதிய வரன்முறை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது என வீட்டுவசதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விதிமீறல் கட்டடங்களுக்கான புதிய வரன்முறை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது என வீட்டுவசதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை உள்பட புறநகர்ப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விதிமீறல் கட்டடங்கள் உள்ளன. இதுபோன்ற விதிமீறல் கட்டடங்கள் மீது சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தொடரும் விதிமீறல்கள்: ஆனால், கூடுதல் தளங்கள் கட்டுவது, வாகன நிறுத்தம் இல்லாதது, காலியிடங்கள் ஆக்கிரமிப்பு, கூடுதல் தளபரப்பை பயன்படுத்துவது, தீத்தடுப்பு விஷயங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் தொடர்ந்து விதிமீறி கட்டப்படுகின்றன.
புதிய சட்டப் பிரிவு: இதுபோன்ற விதிமீறல் தொடர்பான ஆய்வை நீதிபதி மோகன் குழு 2007-இல் மேற்கொண்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி, விதிமீறல் கட்டடங்கள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவு 113 ஏ-விலிருந்து புதியதாக 113சி ஏற்படுத்தப்பட்டது. அதைத்
தொடர்ந்து, நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில், புதிய விதிமுறைகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
ஆனால், விதிமீறல் கட்டட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால், விதிமீறல் கட்டடங்கள் மீது ஒரு சில நடவடிக்கைகளைத் தவிர, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயலவில்லை.
கடும் நடவடிக்கை வேண்டும்: இந்த நிலையில், மௌலிவாக்கம், வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு, தியாகராய நகர் வணிக கட்டட விதிமீறல் போன்ற பல்வேறு கட்டடங்களில் விதிமீறல்கள் இருந்து வருகின்றன. மேலும், இதுபோன்ற கட்டட விபத்துகளால் உயிர், பொருள் சேதங்களுக்கு பிறகு, விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில், அரசும் உள்ளன. அதுபோல், நீதிமன்றத்திலும் விதிமீறல் தொடர்பான வழக்குகளில், புதிய வரன்முறை திட்டங்கள் விரைந்து செயல்படுத்த நீதிமன்றங்களும் அரசை அறிவுறுத்தியுள்ளன.
மேலும், சமூக ஆர்வலர், கட்டுமான நிபுணர்கள், பொதுமக்களும் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
விரைவில் புதிய வரன்முறை திட்டம்: இந்நிலையில், கடந்த மே மாதம் தியாகராய நகர் வணிக கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு, ஏற்கனவே உருவாக்கப்பட்ட புதிய சட்டப் பிரிவு 113சி மூலம், விதிமீறல் கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வருடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீட்டுவசதித்
துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ராஜேஸ்வரன் குழு பரிந்துரைகள், சட்டப் பிரிவு 113 சி ஆகியவற்றின் மூலம் புதிய வரன்முறை திட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து வீட்டு வசதித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2007 ஜூலை மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட (17.2 மீட்டர் வரை) சிறப்பு அடுக்குமாடி விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய வரன்முறை திட்ட விதிமுறைகள் தயார்நிலையில் உள்ளன.
திருத்திக் கொள்ள வாய்ப்பு: இதில், 113சி சட்டப் பிரிவு, நீதிபதி ராஜேஸ்வரன் குழு பரிந்துரைகள் ஆகியவற்றின் மூலம் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை உள்பட மாநிலம் முழுவதுமுள்ள விதிமீறல் கட்டடங்களில் புதிய வரன்முறை விதிமுறை மூலம் திருத்தம் மேற்கொள்ள மீண்டும் வாய்ப்பு வழங்குவது, குறிப்பிட்ட தளபரப்புகளைத் தவிர இதர விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரைவில் நடைமுறைப்படத்தப்படவுள்ளன எனத் தெரிவித்துள்ளன.

5 மடங்கு வரை அபராதம்!
சென்னை உள்பட புறநகர்ப்பகுதி கட்டடங்களில் அனுமதிக்கப்பட்ட தளங்களைவிட அதிகமாக கட்டப்பட்டிருந்தால், விதிமீறியிருந்தால், அதற்கேற்ப 1 முதல் 5 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது.
அதுபோல், திறந்தவெளி இட ஒதுக்கீடு ஆக்கிரமிப்புகளில் வாகன நிறுத்தங்களுக்கும் அபராதம் உள்ளது. இதில், குடியிருப்புகளில் கார் நிறுத்தம் இல்லையெனில், ரூ.10 ஆயிரம், வணிக கட்டடத்துக்கு ஒரு லட்சம், இதர கட்டடங்களுக்கு ரூ.50 ஆயிரம் என உரிமையாளர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
இதுபோல், மேலும் பல்வேறு திருத்தங்கள் புதிய வரன்முறை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மூலம், விதிமீறல் கட்டடங்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என வீட்டு வசதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com