ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தொகுதியில் குவிந்துள்ள 50 ஆயிரம் வெளியூர் நிர்வாகிகள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்றுவதற்காக, வெளியூரிலிருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்றுவதற்காக, வெளியூரிலிருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதனால், முக்கிய அரசியல் கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகள், திமுக ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலர், இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகர, ஒன்றியச் செயலாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூரைச் சேர்ந்த நிர்வாகிகள், வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலின்படி வாக்குச்சாவடியாகப் பிரித்து தேர்தல் பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்துக்கும் பகுதி, மண்டலம் வாரியாக மேற்பார்வையாளர்களாக கட்சிகளின் மிக முக்கிய பிரமுகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக (அம்மா) அணி, திமுக சார்பில் தலைமைத் தேர்தல் பணிமனையையும் திறந்துவிட்டனர். ஆனால், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) ஞாயிற்றுக்கிழமைதான் பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்துள்ளது.
அதிமுக (அம்மா) அணியைப் பொருத்தவரை ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது பொறுப்பு வகித்த இடங்களே பெரும்பாலும் தற்போதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வெளியூரிலிருந்து வந்துள்ள முக்கிய பிரமுகர்களால் உள்ளூர் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரசார உத்தி, கூட்டம், ஊர்வலம், பிரசாரத்துக்கு ஆட்கள் திரட்டுதல், அவர்களுக்கான உணவு, செலவினங்கள் அனைத்தையும் அந்தந்த பகுதியில் அமர்த்தப்பட்டுள்ள வெளியூர் நிர்வாகிகளே கவனித்துக் கொள்கின்றனர்.
உள்ளூர் நிர்வாகிகளைப் பொருத்தவரை வெளியூர் பிரமுகர்களுக்கு வழிகாட்டுவதும், உதவுவதும்தான் முக்கிய பணியாக உள்ளது. வெளியூர் பிரமுகர்களுக்கோ அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வாங்கும் வாக்குகளில்தான் அவர்களது எதிர்காலமே உள்ளது என்பதால் கடும் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com