குடிசைப் பகுதிகளில் காசநோய் பரிசோதனை

சென்னை மாநகராட்சி குடிசைப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி குடிசைப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுச் சுகாதாரத் துறை கீழ் இயங்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், காசநோய் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சளி பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஆறு மாத காலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் மருந்துகளை முறையாக உட்கொள்கிறார்களா என்று சுகாதாரத் துறையினர் நேரிடையாக கண்காணித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், காசநோய் இல்லாத சென்னையை உருவாக்க, முதல்கட்டமாக காசநோய் களப் பணியாளர்கள் மூலம் குடிசைப்பகுதிகளில் வீடு வீடாகப் பரிசோதனைகள் மேற்கொண்டு, யாருக்காவது காசநோய் அறிகுறிகள் உள்ளதா என்று கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் 80 காசநோய் களப் பணியாளர்களைக் கொண்டு, 6 நாள்களுக்கு வீடு, வீடாக பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொள்ளும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இதில் தொடர் இருமல், காய்ச்சல், பசியின்மை, எடைக் குறைவு, சளியில் ரத்தம், நெஞ்சு வலி ஆகிய அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com