கடல் அலை மூலம் 100 கிலோவாட் மின்சாரம்: மத்திய புவி அறிவியல் துறைச் செயலர் தகவல்

கடல் அலை மூலம் 100 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய புவி அறிவியல் துறைச் செயலர் எம்.ராஜீவன் தெரிவித்தார்.
கடல் அலை மூலம் 100 கிலோவாட் மின்சாரம்: மத்திய புவி அறிவியல் துறைச் செயலர் தகவல்

கடல் அலை மூலம் 100 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய புவி அறிவியல் துறைச் செயலர் எம்.ராஜீவன் தெரிவித்தார்.
 சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தில் "கடலிலிருந்து மின்சாரம் - ஓர் உலகளாவிய பார்வை' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய புவி அறிவியல் துறை செயலர் எம். ராஜீவன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசியது: கடலிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற சர்வதேச எரிசக்தி முகமையின் அமைப்பில் இந்தியா கடந்த 2016-ஆம் ஆண்டு உறுப்பினரானது. இதன்மூலம் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து கடல்சார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அது தொடர்பான தகவல்களைப் பெறவும் முடியும். அந்தத் தகவல்களை நம் நாட்டில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் அளிக்க முடியும்.
 தற்போது இந்தியா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் கடலிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. இதில் நாமும் பரீட்சார்த்த முறையில் 100 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க உத்தேசித்துள்ளோம். வரும் 2020-இல் 175 ஜிகா வாட் மின்சாரத்தை சூரிய ஒளி, காற்று, பயோமெட்ரிக் முறைகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
 கடல் அலை ஆற்றலில் வழிகாட்டி மிதவை: ராஜீவன் செய்தியாளர்களிடம் கூறியது: துறைமுகத்திற்கு கப்பல்கள் சரியான வழித்தடத்தில் வந்து சேருவதற்கான வழிகாட்டி மிதவை சோலார் மூலம் இயங்கி வந்தது. கடல் அலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் இயங்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொழில் நுட்பம் இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
 முன்னதாக, உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் வழிகாட்டி மிதவையை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆய்வுக்கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
 தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழக இயக்குநர் எஸ்எஸ்.சி.ஷெனாய், எரிசக்தி மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைத் தலைவர் பூர்ணிமா ஜலிஹல், சர்வதேச எரிசக்தி முகமையின் கடல் ஆற்றல் அமைப்புத் தலைவர் ஹென்றி ஜெஃப்ரே, செயலர் ஆன பிரிட்டோ இ மெலோ ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com