தீபாவளிக்கு சென்னையிலிருந்து பேருந்துகள் புறப்படும் இடங்கள்

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் பேருந்துகள் புறப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் பேருந்துகள் புறப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அக்.15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 11, 645 சிறப்புப் பேருந்துகள் கீழ்கண்ட நான்கு பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தின் வெளிப்பகுதி, பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்பத்தூர், எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பேருந்துகள்.
அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: ஆர்க்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைத் தாண்டிச் செல்லும் பேருந்துகள்.
சைதாப்பேட்டை மாநகரப் பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
கட்டுப்படுத்தி அனுப்பும் இடங்கள்: கீழ்க்கண்ட ஆறு இடங்களில் பேருந்துகளை நிறுத்தி கட்டுப்படுத்தி, சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜீரோ பாயிண்ட், இரும்புலியூர், மதுரவாயல் டோல் பிளாசா, பி.எச் ரோடு, கார்த்திகேயன் நகர், எம்.ஜி. ஆர். யுனிவர்சிட்டி, நெற்குன்றம், தூர்சன்பவர் சிஸ்டம். அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகளை கோயம்பேடு மலர் வணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி இடத்திலும், லாரிகள் நிறுத்தும் இடத்திலும், பருப்பு மார்க்கெட்டிலும் நிறுத்திவைத்து, அங்கிருந்து போக்குவரத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள்: ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு சந்தை "உ' சாலையில் உள்ள நிறுத்தத்திலிருந்து, "ஆ' சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்லவேண்டிய ஊர்களுக்கு செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனரக மற்றும் சரக்கு வாகனங்கள்...தீபாவளி பண்டிகை போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, வரும் 15, 16, 17 மற்றும் 23 ஆகிய நான்கு நாள்களிலும், பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மார்க்கங்களிலிருந்து சென்னை வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மேற்கண்ட வாகனங்கள் மாதவரம் ஜி.என்.டி சாலை, மாதவரம், பாடியநல்லூர் டோல்கேட் அருகில், திருவள்ளூர் சாலை, கள்ளிகுப்பம் டோல்கேட் , மதுரவாயல் டோல்கேட், வெளிவட்ட சாலை நசரத்பேட்டை, ஜி.எஸ்.டி ரோடு, செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், வண்டலூர் பாலம் வழியாக இயக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையிலிருந்து அண்ணாசாலை வழியாகவும், அடையாறிலிருந்து சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை வழியாகவும் பெருங்களத்தூர் வரை செல்லும் வாகனங்களை கான்கார்டு சந்திப்பில் வேளச்சேரி பிரதான சாலை வழியாக பெரும்பாக்கம், அகரம்தென் சாலை, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக மாற்றுப் பாதையில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக... 100 அடி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் சிப்பெட் கம்பெனி அருகிலிருந்து கிண்டி நோக்கி கத்திப்பாரா மேம்பாலம் வந்து, சின்னமனை, தாலுகா அலுவலக ரோடு , கான்கார்டு சந்திப்பு, வேளச்சேரி மெயின்ரோடு, பெரும்பாக்கம், அகரம் தென் ரோடு, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது. 
100 அடி சாலை, பாடியிலிருந்து கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச். சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. 
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-ஆவது அவென்யு, 2-ஆவது நிழற்சாலை, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு , மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-ஆவது பிரதான சாலை, 2-ஆவது நிழற்சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.
வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர் சந்திப்பு , ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாகச் செல்ல வேண்டும். பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டால், வண்டலூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், பெருங்களத்தூர் சந்திப்பிலிருந்து காந்தி ரோடு, நெடுங்குன்றம், ஆலபாக்கம், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் திருப்பிவிடப்படும்.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள்...பண்டிகைக் காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் உள்ளதால், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் வாகன ஓட்டுநர்கள் இ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com