போலி வழக்குரைஞர்கள் விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

போலி வழக்குரைகள் விவகாரத்தில் தமிழக அரசு, வழக்குரைஞர் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போலி வழக்குரைகள் விவகாரத்தில் தமிழக அரசு, வழக்குரைஞர் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரிக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்தது. இதையடுத்து, இந்தக் கல்லூரியில் 2 -ஆம் ஆண்டு படிக்கும் 145 மாணவர்கள், தங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்த விஷயத்தில் கல்லூரியை நிர்வகிக்கும் இரண்டு அறக்கட்டளைகளும் பேசி முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தார். 
இந்நிலையில், கடந்த மாதம் 20 -ஆம் தேதி கல்லூரி நிர்வாகிகளுக்கும், வழக்குரைஞர்கள் சிலருக்கும் இடையே கல்லூரிக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிகழ்வு குறித்த விவரங்கள் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 
கடந்த 2015 -ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, இந்தியாவில் 30 சதவீதம் போலி வழக்குரைஞர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. சான்றிதழ்களை விலைக்கு வாங்கி போலி ஆவணங்கள் மூலம் வழக்குரைஞர்கள் சங்கத்தில் பதிவு செய்கின்றனர். போலி சான்றிதழ் மூலம் வழக்குரைஞரானவர்கள் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுகின்றனர். மேலும் 20 சதவீதம் பேர் வழக்குரைஞர் தொழிலை செய்யாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்வதில்லை.
தவறு செய்யும் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்குரைஞர்கள் மீது வழக்குரைஞர் சங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்னை மருத்துவ க்கல்லூரி விவகாரத்தில், கல்லூரி தற்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது, கருப்பு, வெள்ளை உடையணிந்து போலி வழக்குரைஞர்கள் கல்லூரிக்கு நுழைய அனுமதி வழங்கியது யார், கல்லூரியின் தற்போதைய நிலை என்ன, கல்லூரிக்குள் ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளனவா, கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் மீது வழக்குரைஞர் சங்கம், காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வரும் 24 -ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com