சமையல் கூடத்தில் தீ விபத்து: 3 மணி நேரம் போராடி அணைப்பு

சென்னை தியாகராயநகரில் சமையல்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.

சென்னை தியாகராயநகரில் சமையல்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இது குறித்த விவரம்: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் மாம்பலம் ரயில் நிலையம் அருகே ஒரு ஜவுளிக் கடையின் வீட்டு உபயோகப் பொருள்கள் கடை 3 மாடி கட்டடத்தில் உள்ளது. இந்த கட்டடத்தின் 3}ஆவது தளத்தில் சமையல் கூடம் உள்ளது.
மறதி காரணமாக...: இங்கு ஸ்வீட் கடைகளுக்குத் தேவையான இனிப்பு வகைககள், கார வகைகள் மொத்தமாக தயாரித்து வழங்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை என்பதால் அந்த சமையல் கூடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை ஊழியர்கள் வேலை செய்தனர். பின்னர் அவர்கள், மின் விளக்கை அணைக்காமலும், சமையல் எரிவாயு உருளையை சரியாக மூடாமலும் சென்றதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அந்த சமையல் கூடத்தில் இருந்த சில பொருள்கள் எரிந்து கரும் புகை வெளியேறியது. இதைப் பார்த்த அங்கிருந்த கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
3 மணி நேரம் தொடர்ந்து போராடி...: இதையடுத்து அவர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் பாண்டி பஜார்,தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேவேளையில் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனமும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மூன்றாவது தளத்தில் சமையல் எரிவாயு உருளைகளை பாதுகாப்புடன் அங்கிருந்து தீயணைப்பு படை வீரர்கள் அகற்றினர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதி குறுகலாக இருந்ததால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையே தீ அந்த தளத்தில் இருந்து, வேறு தளத்துக்குப் பரவாதவாறு தீயணைப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு படை வீரர்களின் தொடர் முயற்சியின் காரணமாக, சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில்...: விபத்து ஏற்பட்ட சமையல் கூடத்தில் எளிதில் தீப் பிடிக்கும் பொருள்களை பாதுகாப்பு இல்லாமல் வைத்ததினால் தீ விபத்து ஏற்பட்டிருப்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக தியாகராயநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com