தீபாவளி பண்டியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டியை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டியை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் (தேமுதிக): தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய வேளையில், தமிழகம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. பல்லாயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்குவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன். 
வெகு சிறப்பாக தீபாவளி திருநாளைக் கொண்டாடும் நிலையில் இல்லையென்றாலும், அவரவர் சக்திக்கேற்ப தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். வரும் காலங்களில் தங்களின் வாழ்வில் செழிப்பும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்பட்டு மக்கள் அனைவரும் வளமான வாழ்வு வாழ, ஒளிமயமான எதிர்காலம் அமைந்திட வாழ்த்துகிறேன்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): மனித இனத்துக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள் அகற்றப்பட்ட நாளையே தீபாவளி திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய மத்திய அரசின் கீழும், மாநில அரசினாலும் மக்கள் படும் துயரமும், வறுமையும் அகன்று அனைத்து மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் பெருக நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
ராமதாஸ் (பாமக): தீபத்தின் ஒளியைப் போலவே விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைக்கக்கூடிய ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்.
அன்புமணி (பாமக): இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும். வறுமையும், சுரண்டலும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிய வேண்டும் என்பன உள்ளிட்ட இலக்குகளை வென்றெடுக்க உறுதியேற்க வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): தீயன மறையும், நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கும் நாள் தீபாவளி. இன்று தேசத்தில் நிலவும் பேதங்களும், பிணக்குகளும் நீங்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் அன்பும், அணுகுமுறையும் மலர வேண்டும். ஒட்டு மொத்த மக்களும் மகிழ்வோடு வாழ வேண்டும்.
கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாசாரங்களைக் கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். இந்த உணர்வில் நம்பிக்கையுள்ளவர்கள் தேசத்துக்கு நல்வழி காட்டவும் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மக்களாக எல்லோரும் வாழவும் இறையருளை வேண்டுகிறேன்.
நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்): பண்பாடு, கலாசாரம் காத்திடவும், நாடு நலம்பெறவும் நாட்டு மக்கள் வளம் பெறவும் நல்லிணக்கம் பேணவும், ஏழ்மை போக்கிடவும் தீபாவளி திருநாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com