அம்பத்தூரில் குப்பை வனம்: மாநகராட்சி புதிய முயற்சி

அம்பத்தூர் - வானகரம் சாலையில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் மீது புல் செடிகளை வளரவைத்து குப்பை வனமாக மாநகராட்சி நிர்வாகம் மாற்றியுள்ளது.
அம்பத்தூர் - வானகரம் சாலையில் குப்பைகள் மீது புற்கள் வளர்ந்து, பசுமையாக காட்சியளிக்கும் குப்பை வனம்.
அம்பத்தூர் - வானகரம் சாலையில் குப்பைகள் மீது புற்கள் வளர்ந்து, பசுமையாக காட்சியளிக்கும் குப்பை வனம்.

அம்பத்தூர் - வானகரம் சாலையில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் மீது புல் செடிகளை வளரவைத்து குப்பை வனமாக மாநகராட்சி நிர்வாகம் மாற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. 
இப்பகுதிகளில் தினமும் 335 டன் குப்பைகள் சேகரமாகின்றன.துப்புரவுப் பணியில் 1,454 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வானகரம் சாலையில் உள்ள காலி மைதானத்தில் குப்பைகளை கொட்டி வந்தனர். ஆண்டுக் கணக்கில் சேர்ந்த குப்பைகள் மலைபோல் உருவானது.
இதனால், அம்பத்தூர், அயப்பாக்கம் பகுதி மக்கள் துர்நாற்றம், கொசு உற்பத்தி, தொற்றுநோய் பரவும் அபாயம், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும், நிலத்தடி நீரும் மாசடைந்தது. இதனால், கடும் பாதிப்புக்கு ஆளான பொது மக்கள், பொதுநலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் குப்பை கிடங்கை அகற்றக் கோரி, போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அம்பத்தூர் நகராட்சி, சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பிறகு முதல்
வேலையாக நாள்தோறும் சேரும் குப்பைகளை லாரிகள் மூலம் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குக்கு சென்று கொட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், குப்பைகளை சிறிது, சிறிதாக அகற்றி தற்போது குப்பை மலை குன்று போல் காட்சியளிக்கிறது.
மேலும், குப்பை மேட்டை சமன்படுத்தி அவற்றில் புற்கள் நடப்பட்டன. இதனால் குப்பைமேடு, குப்பை வனம் போல் பசுமையாக காட்சியளிக்கிறது. அம்பத்தூர் கிடங்கில் 16 முதல் 20 டன் வரையிலான குப்பைகளிலிருந்து பயிர்களுக்கு தேவையான உரம் தயாரிக்கப்படுகிறது. இதனை வீட்டின் முன்புறம், மாடி தோட்டத்தில் வளர்க்கப்படும் செடி,கொடிகளுக்காக பொதுமக்கள்ஆர்வத்துடன் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
இதேபோல், 16 டன் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து, தனியாருக்கு விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை துப்புரவு தொழிலாளர்களுக்கே பகிர்ந்து வழங்குகின்றனர்.
இதுதவிர குப்பைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, அத்திப்பட்டில் உள்ள தெருவிளக்குகள் எரிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியும், பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையமும் இணைந்து அம்பத்தூர் மண்டலப் பகுதிகளில் சேகரமாகும் 900 கிலோ உணவக கழிவுகளைக் கொண்டு, பயோகேஸ் தயாரித்து வருகின்றன. இவற்றை 84 மற்றும் 89-ஆவது வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களின் சமையல் பணிக்கு அனுப்பி வைக்கின்றனர். 
தினமும் இதுபோன்று ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு தேவையான அளவு குப்பையை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள குப்பைகளை சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டி விடுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரி பாலசுப்ரமணியம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்பேரில், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கண்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இன்னும் கூடுதலான ஒத்துழைப்பு கிடைத்தால் அம்பத்தூரில் குப்பையால் பிரச்னை இல்லை என்ற நிலையை எட்டலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com