டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு தீர்வா?

தமிழகத்தில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் தீர்வாக அமையுமா என்பது குறித்து மருத்துவர்கள் பங்கேற்ற விவாதம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் தீர்வாக அமையுமா என்பது குறித்து மருத்துவர்கள் பங்கேற்ற விவாதம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. சித்தா மற்றும் அலோபதி மருத்துவர்கள் பங்கேற்ற இவ்விவாதத்தில், நிலவேம்பின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி ஆவணப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சென்னை மருத்துவக் கல்லூரி ரத்தநாள அறுவைச் சிகிச்சைத் துறை முன்னாள் தலைவர் டாக்டர் அமலோற்பவநாதன்: உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்ட கொள்ளை நோய்களுக்கு எந்த மருந்தும் தீர்வைக் கூறவில்லை. பொது சுகாதாரத் துறையின் செயல்பாடுகளே நோய்களைக் குறைத்துள்ளன. எனவே, அரசு குறிப்பிட்ட மருந்தைப் பரிந்துரைக்காமல், பொது சுகாதாரத் துறையின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நிலவேம்பு குடிநீர் குறித்த முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர் மருத்துவர் கண்ணன்: சித்த மருத்துவம் என்பது மூலக்கூறுகள் உயிரியல் சார்ந்த மருத்துவம் அல்ல, பல்வேறு மருந்துகள் சார்ந்த மருத்துவம். சித்த மருந்துகளில் நட்புச் சரக்கு, பகைச் சரக்கு என்ற அம்சம் இடம்பெற்றிருக்கும். அதாவது குறிப்பிட்ட மருந்தில் ஏதாவது உடலுக்கு பக்கவிளைவுகள் அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய தன்மை இருந்தால், அதனை சீராக்குவதற்கு நட்புச் சரக்கு சேர்க்கப்படும். எனவே, நிலவேம்பு குடிநீரால் எவ்வித பாதிப்பும் இல்லை.
பிரபல விமர்சகரும் மருத்துவருமான டாக்டர் சுமந்த் சி ராமன்: நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலுக்கு குணமளிக்க முடியும் என்றால் அதற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்த வேண்டும். தற்போது டெங்கு பாதிப்பு ஏறப்பட்டுள்ளதால், இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு நிலவேம்பு குடிநீர் குறித்த முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரபல சித்த மருத்துவர் சிவராமன்: வியட்நாம் போர் நடைபெற்ற சமயத்தில் டெங்கு காய்ச்சலைப் போன்ற காய்ச்சல் பரவியது. அப்போது சீனக் கஷாயம் என்று அழைக்கப்பட்ட நிலவேம்பு குடிநீர் 2.5 கோடி மக்களை சாவில் இருந்து காப்பாற்றியது. தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. இப்போது அதனை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்குத் தான் வழியை ஆராய வேண்டும். அதைவிடுத்து, தர்க்கத்துக்காக சித்த மருத்துவத்தைக் குறைக் கூறக் கூடாது. பல நூறு ஆண்டுகளாக நிலவேம்பு குடிநீர் சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவ முறைகளுடனான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதை சித்த மருத்துவர்களும் திறந்த மனதோடு ஏற்கிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com