சுற்றுச்சூழல் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி: ஜப்பான் செல்லும் தமிழக மாணவர்கள்

சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜி.நந்தினி உள்பட 4 மாணவர்கள் ஜப்பானின்

சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜி.நந்தினி உள்பட 4 மாணவர்கள் ஜப்பானின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக, அடுத்த மாதம், அந்த நாட்டுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
இது குறித்த விவரம்:- இந்திய - ஜப்பானிய நல்லுறவை வளர்க்கும் செயல்பாடுகளில் "ஏபிகே ஏஓடிஎஸ் தோசோகாய்' நிறுவனத்தின், தமிழக மையம் கலாசார செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, ஜப்பான் குறித்த பேச்சுப் போட்டி நடத்தும். அதில் வெற்றி பெறுபவர்கள், ஜப்பான் கலாசாரம், பண்பாடு, பிற நாடுகளுடன் உள்ள தொடர்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள, அந்நாட்டுக்கு அழைத்து செல்லப்படுவர்.
அதற்கான பேச்சுப்போட்டி சென்னையில் சனிக்கிழமை (செப்.16) நடைபெற்றது. 
அரசுப் பள்ளி மாணவர்கள் பிரிவில் சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஜி.நந்தினி முதல் பரிசைப் பெற்றுள்ளார். 
இதேபோன்று தனியார் பள்ளிகள் பிரிவில் சென்னை கிருஷ்ணாநகரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியைச்சேர்ந்த பிளஸ் 2 மாணவி எம்.முத்துதேசிகா, கல்லூரி மாணவர்கள் பிரிவில் காரப்பாக்கம் கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் என்.அரவிந்த், ஜப்பான் கல்வி மையம் சார்பில் எஸ்.சண்முகப்பிரியா ஆகிய மாணவர்கள் அந்தந்த பிரிவுகளில் முதல் பரிசு பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற மாணவர்கள் நான்கு பேரும் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி ஜப்பான் நாட்டுக்கு கல்விச் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 
இதற்கான பயணச் செலவு உள்பட அனைத்து செலவுகளையும் ஜப்பானைச் சேர்ந்த ஹியோஷி நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என அதன் மேலாண்மை இயக்குநர் தடாஷி சுசூகி தெரிவித்தார். 
மேலும் 4 பிரிவுகளிலும் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com