தாமதமாகும் ஊதியம்: அதிருப்தியில் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள்

அமரர் ஊர்தி வாகன ஓட்டுநர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதால் அதிருப்தியில் உள்ளனர்.

அமரர் ஊர்தி வாகன ஓட்டுநர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதால் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் இலவச அமரர் ஊர்தி சேவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நோயாளிகளின் உடலை இலவசமாக அவர்களது வீடுகளுக்கு அல்லது இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் சேவை அளிக்கப்படுகிறது. 155377 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம் இந்தச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 161 அமரர் ஊர்தி வாகனங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் எண்ணிக்கையை 180 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 
ஒரு வாகனத்துக்கு 2 ஓட்டுநர்கள் வீதம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்தச் சேவையில் பணியாற்றுகின்றனர். ஒப்பந்தப் பணியாளர்களாகவே ஓட்டுநர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஓட்டுநர்கள் சிலர் கூறியது:
ஒரு அமரர் ஊர்தி ஓட்டுநர் 12 மணி நேரம் பணியாற்றுகிறார். ஜூலை மாதம் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 3 மாதங்களாக ஊதியம் தாமதமாக வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
பல்வேறு குளறுபடிகள்: ஊதியம் தவிர, ஓட்டுநர்கள் கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான ஊதியம் உள்ளிட்ட இதரப் படிகள் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படவில்லை. மேலும் வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதற்கான நிதி மாத மாதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வார வாரம் வழங்குவதால், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு பல ஊர்திகள் 2, 3 தினங்கள் இயக்கப்படாமல் உள்ளன. மேலும் வாகனங்கள் பழுது பார்த்ததற்கான செலவுத் தொகையையும் அளிக்கவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அமரர் ஊர்தி சேவையை இயக்கி வரும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் உயர் அதிகாரி கூறுகையில், "தமிழகத்தில் அமரர் ஊர்தி சேவை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 300 உடல்கள் இந்த ஊர்தியின் மூலம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இந்திய செஞ்சிலுவைச் சங்க நிர்வாகத்தில் அண்மையில் மாற்றம் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
இருப்பினும், நீதிபதி ஒருவரின் தலைமையில் பணிகள் தொய்வில்லாமல் நடைபெற்று வருகின்றன. நிதி தொடர்பான பிரச்னைகளுக்கென்று ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அனைத்துப் பிரச்னைகளும் திங்கள்கிழமை தீர்க்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com