கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ. 5 கோடியில் அதி நவீன இருதய ஊடுருவி ஆய்வகம்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ. 5 கோடி செலவில் இருதய உள் ஊடுருவி ஆய்வகம் (கேத் லேப்) புதிதாக
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இருதய உள் ஊடுருவி ஆய்வகம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இருதய உள் ஊடுருவி ஆய்வகம்


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ. 5 கோடி செலவில் இருதய உள் ஊடுருவி ஆய்வகம் (கேத் லேப்) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தின் மூலமாக நாளொன்றுக்கு 15 நோயாளிகளுக்கு இதய நோய் சிகிச்சைகள் அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, இதய கரோனரி ரத்த குழாயில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா? என்பதை இந்த வகையான ஆய்வகங்களில்தான் பரிசோதிக்க இயலும். அதேபோன்று, இதய வால்வுகள் சுருங்கியிருந்தால் அதனைச் சீராக்குவதற்கான சிகிச்சைகளையும், இதயத்தில் துளைகள் ஏற்பட்டால் அதனைச் சரி செய்யும் சிகிச்சைகளையும் உள் ஊடுருவி ஆய்வகங்களில் மேற்கொள்ளலாம். மேலும், சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னைகளை சரி செய்வதற்கான சிகிச்சைகளையும் அங்கு அளிக்க முடியும்.
இந்த வகை சிகிச்சைகளுக்கும், பரிசோதனைகளுக்கும் தனியார் மருத்துவமனைகள் குறைந்தது ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கின்றன. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் உள்ள இருதய உள் ஊடுருவி ஆய்வகங்களை நம்பியே உள்ளனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆய்வகமானது ஏற்கெனவே ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், கீழ்ப்பாக்கத்தில் அந்த வசதி இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. 
இந்நிலையில் மாநிலத்தில் மேலும் சில மருத்துவமனைகளில் இருதய உள் ஊடுருவி ஆய்வகங்கள் அமைப்பதற்கான அறிவிக்கையை அரசு பிறப்பித்தது. அவற்றில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையும் ஒன்று. அங்கு ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. 
மருத்துவமனையின் பிரதான கட்டடத்தில் சுமார் 4,000 சதுர அடியில் அந்த ஆய்வகம் அமைக்கப்பட்டது. பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதற்காக அதி நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டன. தற்போது அதன் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஆறுமுகம் கூறியதாவது: இதய செயல்பாடுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம். அதைக் கருத்தில் கொண்டே, இத்தகைய நவீன ஆய்வகங்களை அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு அமைத்து வருகிறது. 
அந்த வகையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தின் மூலம் நாள்தோறும் 10-இலிருந்து 15 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதுமட்டுமன்றி, ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ள எஃப்.எஃப்.ஆர். எனப்படும் நவீன மருத்துவ சாதனத்தின் வாயிலாக இதய ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்றார் அவர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறுகையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அலைக்கழிக்காமல், அவர்களுக்குத் தேவையான அனைத்து உயர் சிகிச்சைகளையும் இங்கேயே அளித்து வருகிறோம்; அந்த வரிசையில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வகத்தின் மூலம் பல்வேறு வகையான இதய நோய்களுக்கும் சிகிச்சைகளை அளிக்கக் கூடிய நிலை எட்டப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com