சென்னை மக்கள் வியந்து கண்டுகளித்த சந்திரகிரகணம் !

அரிய நிகழ்வாக 152 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை மாலை தோன்றிய சூப்பர் நிலா, சந்திர கிரகண நிகழ்வை சென்னையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திரகிரகணத்தை புதன்கிழமை தொலைநோக்கி மூலம் கண்டு களித்த பொதுமக்கள்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திரகிரகணத்தை புதன்கிழமை தொலைநோக்கி மூலம் கண்டு களித்த பொதுமக்கள்.

அரிய நிகழ்வாக 152 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை மாலை தோன்றிய சூப்பர் நிலா, சந்திர கிரகண நிகழ்வை சென்னையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என அறிவியல் அறிஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக ஆர்வத்துடன் பார்வையிட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. புதன்கிழமை மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது. இதைக்காண சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக அங்கு ஏராளமான பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மாலையிலேயே குவிந்தனர். சந்திர கிரகணம், சூப்பர் நிலா, சிவப்பு நிலா என 3 அபூர்வ நிகழ்வுகளைக் காணும் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டது. வழக்கமான பிரகாசத்தைக் காட்டிலும் அதிகமாகவும், அளவில் சற்று பெரியதாகவும் நிலவு தெரிந்தது.
சந்திர கிரகணத்தைக் காண சென்னை மெரீனா கடற்கரையில் திரளானோர் திரண்டனர். பெளர்ணமியையொட்டி வழக்கத்தைக் காட்டிலும் கடல் அலையின் வேகம் அதிகம் காணப்பட்டதால் பலரும் அச்சத்துடன் கடற்கரையில் நின்று நிலவை ரசித்தனர். மீண்டும் இதுபோன்ற சந்தர்ப்பம் வரும் 2028-ஆம் ஆண்டில்தான் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் மையம்: தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சந்திர கிரகணத்தை காணும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு பைனாகுலர் மற்றும் தொலைநோக்கிகள் மூலம் விஞ்ஞானிகள் கிரகணம் குறித்து விளக்கம் அளித்தனர். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அறிவியல் கழகத்தினர் கிரகணம் பற்றி அறிவியல் ரீதியிலான புரிதலை புதன்கிழமை ஏற்படுத்தினர். 
பிர்லா கோளரங்கத்தில்: சென்னை கோட்டூர்புரம் தமிழ்நாடு பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கிகள் மூலம் பொதுமக்கள் சந்திர கிரகணத்தைத் துல்லியமாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிரகணம் என்றால் என்ன, எதனால் நிகழ்கிறது, சூப்பர் மூன் என்றால் என்ன போன்ற விளக்கங்கள் எல்இடி திரையில் காட்டி பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பிர்லா கோளரங்கத்தில் மட்டும் புதன்கிழமை மாலை 1,500-க்கும் மேற்பட்டோர் சந்திர கிரகணத்தைப் பார்த்துச் சென்றனர்.
சந்திர கிரகணம் குறித்து பல்வேறு குழப்பங்கள் இருந்தன. பாடப் புத்தகத்தில் இதுபற்றி இருந்தாலும் நேரில் காணும் அரிய வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காகவே பிர்லா கோளரங்கத்துக்கு வந்தேன். படிப்படியாக நடந்த இந்த சந்திர கிரகணம் என்னால் என்றைக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது என்று கோளங்கத்தில் சந்திர கிரகணத்தை பார்த்து திரும்பிய பள்ளி மாணவர் எம்.ஆகாஷ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com