சகோதரி-சகோதரியின் கணவரை விஷம் கொடுத்து கொன்ற தங்கை: ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் துப்புதுலங்கியது

சென்னை மயிலாப்பூரில் அக்காள்-அக்காள் கணவருக்கு விஷம் கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த தங்கையும், அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
சகோதரி-சகோதரியின் கணவரை விஷம் கொடுத்து கொன்ற தங்கை: ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் துப்புதுலங்கியது

சென்னை மயிலாப்பூரில் அக்காள்-அக்காள் கணவருக்கு விஷம் கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த தங்கையும், அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
 மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (45). இவரது மனைவி மீனாட்சி (38). தர்மலிங்கம் அந்தப் பகுதியில் பூக் கடை நடத்தி வந்தார். தர்மலிங்கத்துக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உண்டு. இத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. மீனாட்சியின் தங்கை மைதிலியும் (35) அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரும், அங்கு தனது கணவருடன் இணைந்து பூ வியாபாரம் செய்து வருகிறார்.
 தர்மலிங்கத்தின் பூக் கடையில் அவரது உறவினர், அதேப் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (29) என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் மைதிலிக்கும், பாலமுருகனுக்கும் தவறான உறவு ஏற்பட்டதாம். இதையறிந்த தர்மலிங்கம், பாலமுருகனை கண்டித்துள்ளார். ஆனால் பாலமுருகன், மைதிலியுடனான உறவை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தர்மலிங்கம், பாலமுருகனை தாக்கி மிரட்டினாராம்.
 இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி தர்மலிங்கத்துக்கு வாந்தி,பேந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர், மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு அடுத்த நாள் உடல் நலம் பாதிக்கப்பட்ட மீனாட்சியும், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் இருவரையும் மருத்துவமனையில் மைதிலியும், பாலமுருகனுமே கவனித்து வந்தனர்.
 தம்பதி சாவு: அங்கு சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் அந்த மாதம் 9-ஆம் தேதியும், அதே மாதம் 13-ஆம் தேதி மீனாட்சியும் இறந்தனர். கணவரும்-மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்தது, அவர்களது உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 இதற்கிடையே தர்மலிங்கத்தின் சகோதரர் குமார், தர்மலிங்கம்-மீனாட்சி இறப்பில் சந்தேகம் இருப்பதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தர்மலிங்கம்,மீனாட்சி சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை, சில வாரங்களுக்கு பின்னர் போலீஸாருக்கு கிடைத்தது. அதில் இருவரும், விஷம் வைத்து கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
 இது தொடர்பாக போலீஸார் தர்மலிங்கத்தின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். ஆனால் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில், தர்மலிங்கத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சம் மைதிலி பெற்றிருப்பதும், தர்மலிங்கத்தின் பல லட்சம் மதிப்புள்ள சொத்துகள் மைதிலிக்கு உயில் எழுதி வைக்கப்பட்டிருப்பதும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 மது, சாப்பாட்டில் விஷம்: இதையடுத்து மைதிலியையும், பாலமுருகனையும் பிடித்து விசாரணை செய்தனர். போலீஸார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
 பாலமுருகனுடன் மைதிலி தவறான உறவு வைத்திருந்ததை தர்மலிங்கமும், அவரது அக்காள் மீனாட்சியும் கண்டித்திருக்கின்றனர். அப்போது மைதிலிக்கு, அவர்கள் இருவர் மீதும் விரோதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால், அந்த சொத்துகளை மைதிலி அபகரிக்கவும் திட்டமிட்டார். இதற்கு தனது ஆண் நண்பர் பாலமுருகனுடன் இணைந்து அவர்கள் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தார்.
 திட்டப்படி, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தர்மலிங்கம், மது அருந்தும்போது அதில் பாலமுருகன் மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்தார். அதே மாதம் மீனாட்சி சாப்பிடும்போது, பாகற்காய் கூட்டில் மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து மைதிலி கொடுத்தார். இந்த விஷத்தை சாப்பிட்ட இருவரும், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு பின்னர் இறந்திருக்கின்றனர்.
 வெற்று காசோலையில் கையெழுத்து: மருத்துவமனையில் மீனாட்சி, தர்மலிங்கம் சரியான சுயநினைவில் இல்லாமல் இருக்கும்போதே, மைதிலி தேதி குறிப்பிடப்படாத காசோலையிலும், வெற்றுப் பத்திரங்களிலும் கையெழுத்து பெற்றுள்ளார். இருவரும் இறந்த பின்னர், வங்கியில் இருந்து ரூ.17 லட்சத்தை எடுத்து மைதிலியும், பாலமுருகனும் ஆடம்பரமாக செலவு செய்திருக்கின்றனர். அதேபோல தர்மலிங்கத்தின் சொத்துகளையும் கையகப்படுத்தியிருக்கின்றனர்,
 இதில் காசோலையிலும், பத்திரங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்த தேதியில் தர்மலிங்கமும், மீனாட்சியும் முழுவதுமாக சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் இருந்திருப்பதை
 போலீஸார் உறுதி செய்ததால், மைதிலி, பாலமுருகன் மீது மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்யும்போது, இருவரும் சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து போலீஸார் மைதிலியையும், பாலமுருகனையும் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடம், கொலைக்கு பயன்படுத்திய விஷத்தை எங்கு வாங்கினார்கள், என்ன வகை விஷம் என போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com