தூத்துக்குடி சம்பவம் எதிரொலி: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட கலவரத்தை அடுத்து போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், சென்னை மாநகரின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் ஆகியவை நடைபெற்றன. இந்நிலையில், தூத்துக்குடியில் புதன்கிழமை காலை மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவங்களைக் கண்டித்து சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சில அமைப்பினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாநகர போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழக்கமாக 10 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். தூத்துக்குடி சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக கிடைத்த தகவல் காரணமாக, தற்போது, 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வழக்கம்போல் பணிகள் நடைபெற்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com