அவசர தேவைக்கு காவலன் செயலியை பயன்படுத்துங்கள்: பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள்

அவசர தேவைக்கு காவல் துறையை அழைக்க காவலன் செயலியை பயன்படுத்துமாறு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


அவசர தேவைக்கு காவல் துறையை அழைக்க காவலன் செயலியை பயன்படுத்துமாறு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அண்மையில் Kavalan sos App என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் , சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவின்பேரில் இணை ஆணையர் ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செல்லிடப்பேசி செயலியை ஐ-போன், ஆண்ட்ராய்டு ஆகிய இருவகை செல்லிடப்பேசிகளிலும் பயன்படுத்தலாம். காவல்துறையை அவசர தேவைக்கு அழைப்பதற்கு இந்த செயலியில் உள்ள பொத்தானை ஒருமுறை அழுத்தினால் கூட, அதுகுறித்த தகவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்துவிடும். மேலும் சம்பந்தப்பட்ட நபர், எங்குள்ளார் என்பது குறித்த தகவலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்பாட்டு அறை காவலர்கள் உடனடியாக அறிந்துக் கொள்ள முடியும்.
அத்துடன் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்த ஒரு நிமிஷத்தில், சம்பந்தப்பட்டவரின் செல்லிடப்பேசியில் உள்ள கேமரா தானாக இயங்கத் தொடங்கி, அங்கு பதிவாகும் காட்சி நேரலையாக கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும். இந்த செல்லிடப்பேசி செயலி ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் இயங்கும் வசதி கொண்டது. இணைய இணைப்பு இல்லாத இடங்களில்கூட இந்த செல்லிடப்பேசி எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வழியாக செயல்படும்.
இந்த செல்லிடப்பேசி செயலியை பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த செயலியை அனைத்து தரப்பினரும் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com