பாதுகாப்பு அம்சங்கள்: 57 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள், அவற்றின் தரம் குறித்து வியாழக்கிழமை ஆய்வு

திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள், அவற்றின் தரம் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இதில், விதிமுறைகளை பின்பற்றாத 57 பள்ளி வாகனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.  
திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களின் தரத்தை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்துப் பள்ளி வாகனங்களின் தரமும், அதன் பாதுகாப்பு அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் 195 பள்ளிகளில் 1,088 வாகனங்கள் உள்ளன.
ஆய்வின்போது, வாகனங்களில் முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசர கால கதவுகள், தீயணைப்பு கருவிகள், புத்தகப் பை வைக்கும் அடுக்கு, பாதுகாப்பு கம்பிகள் கொண்ட ஜன்னல்கள், உறுதியான தரைத்தளம் ஆகியவை உள்ளனவா என ஆய்வு செய்யப்படும். இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 233 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 31 வாகனங்கள் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தினால் அவற்றிற்கு அனுமதி வழங்கப்படும். வியாழக்கிழமை திருவள்ளூர் வட்டத்துக்கு உள்பட்ட 32 பள்ளிகளிலிருந்து 202 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.
அவற்றில் 105 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 14 வாகனங்களுக்கு பல்வேறு காரணங்களால் தடையில்லா சான்று வழங்கப்படவில்லை.
இந்த ஆய்வு வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகிகளும் தங்களது பள்ளி வாகனத்தை ஆய்வுக்குட்படுத்தி தடையில்லா சான்றுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.ஜெயபாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர் கெ.ரா.திவ்யஸ்ரீ, வாகன ஆய்வாளர்கள் காவிரி, ஜெயகணேஷ், சரவணன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தணியில்...
திருத்தணி, மே 18: திருத்தணியில், பள்ளிப்பட்டு வட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 12 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களில் சுமார் 37-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் மொத்தம் 132 வாகனங்கள் உள்ளன. இந்நிலையில் திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் கிராமத்திலுள்ள தளபதி கே.விநாயகம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் இந்த வாகனங்களின் தரம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
இதில், திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.ஜெயபாஸ்கரன் வாகனங்களை ஆய்வு செய்தார். இதில் 12 வாகனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படவில்லை.
ஆய்வின்போது, திருத்தணி டி.எஸ்.பி. பாலசந்திரன், மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நாச்சியகௌடா, காவல் ஆய்வாளர் சாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com