பாலம் அமைக்க இடையூறு: கட்டடங்கள் அகற்றம்

திருவள்ளூர் அருகே சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்கு இடையூறாக இருந்த கட்டடங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

திருவள்ளூர் அருகே சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்கு இடையூறாக இருந்த கட்டடங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
 திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்தூர் ரயில் நிலையம். இந்த ரயில் தண்டவாள கடவுப்பாதை வழியே நாள்தோறும் அரசுப் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல், இங்கிருந்து பேரம்பாக்கம், மப்பேடு வழியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தக்கோலம் வரையிலும் பேருந்துகள் சென்று வருகின்றன.
 இந்த ரயில் தடம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, அரக்கோணம் வரையில் பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், இந்த கடவுப்பாதை குறைந்தது 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரையில் அடிக்கடி மூடப்படுவதால் வாகனத்தில் செல்வோரும், பேருந்து பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும், காலை மாலை நேரங்களில் அதிக நேரம் மூடப்படுவதால் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
 எனவே, இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இக்கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கத்தில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி ரூ. 14.85 கோடியில் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலை பகுதியில் 25 தூண்களும், ரயில்வே பகுதியில் நான்கு தூண்களும் என மொத்தம் 29 தூண்களுடன் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதில் மீதமுள்ள மூன்று தூண்கள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அங்குள்ள அறநிலையத் துறைக்குரிய நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
 கடந்த சில நாள்களுக்கு முன்பு, அறநிலையத்துறைக்குச் சொந்தமான பகுதியில் உள்ள, 17 கட்டட உரிமையாளர்களுக்கான ஈட்டுத் தொகை, ரூ.98.85 லட்சத்தை வருவாய்த் துறையிடம், நெடுஞ்சாலை துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து கட்டட உரிமையாளர்களுக்கு அந்தத் தொகை கட்டட மதிப்பிற்கேற்ப வழங்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மேம்பாலப் பணிகளுக்கு இடையூறாக இருந்த கட்டடங்களை, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகர், கடம்பத்தூர் வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலையில் போலீஸார் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன. இனி, மேம்பாலத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com