தாங்கல் ஏரி: மர்ம நபர்கள் மதகுகளை மூடியதால் பிரச்னை

திருவள்ளூர் அருகே கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் அதிகாரிகள் ஏரியை திறந்ததை அடுத்து, மர்ம நபர்கள் மதகுகளை மூடியதால் நத்தமேடு கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
தாங்கல் ஏரி: மர்ம நபர்கள் மதகுகளை மூடியதால் பிரச்னை

திருவள்ளூர் அருகே கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் அதிகாரிகள் ஏரியை திறந்ததை அடுத்து, மர்ம நபர்கள் மதகுகளை மூடியதால் நத்தமேடு கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
 திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது நத்தமேடு கிராமம். இக்கிராமத்தில் உள்ள 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி உள்ளது.
 கன மழையால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், ஏரியருகே அமைந்துள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது.
 இதனால் பாதிக்கப்பட்ட பாலாஜிநகர், தணிகாசலம் நகர் , ராயல்கேட் நகர், குமரன் நகர், ராகவேந்திரா நகர் , பார்வதி நகர், பிரியங்கா நகர், சண்முகப்பிரியா நகர் உள்ளிட்ட பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, ஊராட்சி செயலாளர் சதீஷ் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தாங்கல் ஏரி மதகுகள் திறக்கப்பட்டன.
 இதற்கு அப்பகுதியில் மீன்வளர்ப்பில் ஈடுபட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஏரி மதகுகளை மர்ம நபர்கள் மூடிவிட்டனர். இதனால் கிராம மக்களுக்கும், மீன்வளர்ப்போருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
 இதனால், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், உதவி செயற்பொறியாளர் சபாநாயகம் மற்றும் திருநின்றவூர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
 அவர்கள் முன்னிலையில் மதகுகளில் அடைக்கப்பட்ட கற்கள் நீக்கப்பட்டன. அப்போது, விவசாயத்திற்குப் பயன்படும் வகையிலும், வெள்ளப்பாதிப்பு ஏற்படாத வகையிலும் தாங்கல் ஏரியைத் தூர்வாரி கரையைப் பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 நிரம்பியது காக்களூர் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி
 திருவள்ளூர் பகுதிக்கு முக்கியக்குடிநீர் ஆதாரமாக விளங்கும் காக்களூர் ஏரிநிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரி 127 பரப்பளவைக் கொண்டது ஆகும். இந்த ஏரி மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போதைய நிலையில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கால்வாய்கள் மூலம் நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பியுள்ளது. இந்த ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்த மழையால் நிரம்பியுள்ளது. இதனால், திருவள்ளூர் நகராட்சி பகுதிகள், ஈக்காடு, காக்களூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்னை தீரும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், வீர ராகவர் கோயில் தெப்பக்குளத்தில் நீர் ஆதாரம் குறைந்தால் , இந்த ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்த ஏரி நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வலைவீசியும், தூண்டில் மூலமும் மீன் பிடித்து வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com