மாவட்டத்தில் 232 ஏரிகள் நிரம்பின :பொன்னேரியில் அதிகபட்ச மழை

தொடர்மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 232 ஏரிகள் நிரம்பியுள்ளன. பொன்னேரியில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீர்.
பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீர்.

தொடர்மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 232 ஏரிகள் நிரம்பியுள்ளன. பொன்னேரியில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
திருவள்ளூர் பகுதியில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏரிகள், குளங்களில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதுவரையில் இந்த மாவட்டத்தில் உள்ள
சிறியதும், பெரியதுமாக 232 ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் வெற்று நிலங்களில் தேங்கியதோடு, குடியிருப்புப் பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. 
தற்போதைய நிலையில், இம்மழையின் காரணமாக கிராமங்களில் குடிநீர் பிரச்னை குறைந்துள்ளதோடு, விவசாயக் கிணறுகளிலும் கணிசமாக நீர் மட்டம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருவதால், களையெடுக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முழுவதும் பரவலான மழை பெய்தது. 
செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, மழையளவு விவரம்(மி.மீட்டரில்): 
பொன்னேரி - 67, செங்குன்றம் -45.60, கும்மிடிப்பூண்டி- 45, சோழவரம் - 40, தாமரைப்பாக்கம் -30, ஊத்துக்கோட்டை -28, பூந்தமல்லி - 20, பூண்டி - 18.20, திருவள்ளூர் - 14, செம்பரம்பாக்கம் - 10.20,
திருவாலங்காடு - 6, திருத்தணி -5, பள்ளிப்பட்டு-5, அம்பத்தூர் - 4, ஆர்.கே. பேட்டை -3 என மொத்தம் - 369 மி.மீ. மழை பெய்துள்ளது.
பொன்னேரியில் அதிக பாதிப்பு ...
 மாவட்டத்திலேயே பொன்னேரியில் தான் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
பொன்னேரி பகுதியில், அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து 10 நாள்கள் பெய்தது. இதில், மாவட்டத்திலேயே அதிக பட்சமாக 7 செ.மீ. அளவு மழை பொன்னேரி பகுதியில் பெய்துள்ளது. 
இதனால், அகத்தீஸ்வரர் கோயில் குளம், வாணியன் குளம், ஆரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து, பாலாஜி நகர், மூகாம்பிகை நகர், திருவாயர்பாடி, என்.ஜி.ஓ. நகர், சங்கர்
மாருதி நகர், சிவன் கோயில் குளக்கரைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. 
இங்குள்ள ரயில்வே மேம்பாலம் கீழ் தேங்கி நிற்கும் மழை நீரை, நெடுஞ்சாலைத் துறையினர் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். 
கூடுதல் மழையினால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com