விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைத் திட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுப்பண்ணைத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து தெரிவித்தார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுப்பண்ணைத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து தெரிவித்தார். 
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து பேசியதாவது:
மாவட்டத்தில் இதுவரை சொர்ணவாரி பருவத்தில் நெற் பயிரில் 24, 210 ஹெக்டேரும், திருந்திய நெற்பயிரில் 16, 603 ஹெக்டேரும், சிறுதானியங்கள் 710 ஹெக்டேரும், பயறு வகைகள் 360 ஹெக்டேரும், எண்ணெய் வித்துக்கள் 1,070 ஹெக்டேரும், கரும்பு நடவு 290 ஹெக்டேரும், மறுதாம்பு 4, 870 ஹெக்டேரும் பயிரிடப்பட்டுள்ளன. நடப்பு மாதம் முடிய நிகர பயிர் சாகுபடி பரப்பளவு 31, 510 ஹெக்டேர் ஆகும்.
2016-17-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 14,368 விவசாயிகளுக்கு ரூ.18.98 கோடி இழப்பீடு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள 3, 460 விவசாயிகளுக்கு ரூ. 6.63 கோடி விரைவில் வழங்கப்படவுள்ளது. 
நிகழாண்டில் 2017-18-ஆம் ஆண்டு காரீப் பருவத்துக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், நெல் (சொர்ணவாரி), உளுந்து, நிலக்கடலை, கம்பு ஆகிய பயிர்களுக்கு இதுவரை 2,317 விவசாயிகள் 4,737 ஏக்கருக்கு ரூ. 47,38,400 பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்தியுள்ளனர். 
கரும்பு பயிருக்கு காப்பீடு செய்வதற்கு வரும்அக்டோபர் 31 கடைசி தேதியாகும். எனவே, கரும்பு விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி, காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.
நிகழாண்டில் கூட்டுப்பண்ணை திட்டத்தை செயல்படுத்த வேளாண்மைத் துறையின் மூலம் 45 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தோட்டக்கலைத் துறை மூலம் 11 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களும் அமைக்க சிறு, குறு விவசாயிகள் குழு தேர்வுப் பணிகள் நடந்து வருகிறது.
இதில், 5 உழவர் ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைந்து ஒரு உற்பத்தியாளர் குழு உருவாக்கப்படும். ஒவ்வொரு உற்பத்தியாளர் குழுவுக்கும் ரூ. 5 லட்சம் மூலதன நிதியாக வழங்கப்படும். எனவே விவசாயிகள் அனைவரும் கூட்டுப் பண்ணைத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என்றார்.
இதைத் தொடர்ந்து, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டு மானியத்தில் வழங்கும் திட்டம் குறித்த விவரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 
இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு வழங்கவும், விவசாய நிலங்களில் உள்ள இறால் மீன் பண்ணைகளை அகற்றவும், ஏரி குளங்கள், வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கவும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்திக் கட்டுதல், ஆறுகளில் மணல் கொள்ளையைத் தடுத்தல் உள்பட பல்வேறு கோரிக்கைளை முன் வைத்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுரேஷ் ஜோ குமார், வேளாண்மை இணை இயக்குநர் சு.ஞானவேல், வருவாய் கோட்ட அலுவலர்கள் திவ்யஸ்ரீ (திருவள்ளூர்), அரவிந்த் (அம்பத்தூர்), பி.ஜெயராமன்(திருத்தணி) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com