திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட சுரங்கப் பாதை திட்டம்

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இருப்புப் பாதையை கடக்க பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், அதனால் கிடப்பில் உள்ள பணியை விரைந்து
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை இல்லாதலால் தண்டவாளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை இல்லாதலால் தண்டவாளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இருப்புப் பாதையை கடக்க பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், அதனால் கிடப்பில் உள்ள பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தினமும் 210 முறை கடக்கும் ரயில்கள்: சென்னை-திருவள்ளூர்-திருத்தணி மற்றும் வேலூர், காட்பாடி வழியாக திருப்பதி, ரேணிகுண்டா, புத்தூர், மும்பை, பெங்களூரு, புதுதில்லி விரைவு ரயில்களும், புறநகர் ரயில்கள், சரக்கு ரயில்கள் என மொத்தம் 210-க்கும் மேற்பட்ட தடவை ரயில்கள் இவ்வழியே சென்று திரும்புகின்றன. இதில், புறநகர் ரயில்கள் மட்டும் 170 தடவை சென்று திரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 20 பயணிகள் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் என 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன.
நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகள்: இந்த ரயில்களில் நாள்தோறும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனப்
பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர் என சுமார் 1 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் ரூ.15 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. 
ரயில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பாதை: சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் திருவள்ளூர் வழியாகச் செல்வதால் இப்பகுதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இருப்புப் பாதையாகவும் இருந்து வருகிறது. 
இப்பாதையில் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், அதேபோல், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து வருவோரும், திருத்தணி, வேலூர், காட்பாடியில் இருந்து வருவோரும் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். 
அப்போது, 6 நடைமேடைகள் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருபுறமும் தண்டவாளத்தை அடிக்கடி கடந்துதான் பெண்களும், குழந்தைகளும் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
மயானத்திற்குச் செல்ல...: அதேபோல், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மயானத்திற்குச் செல்லவும் இந்த ரயில் நிலைய இருப்புப் பாதையைக் கடந்துதான் மணவாளநகர் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டியுள்ளது. அப்போது பொதுமக்கள் அதிகம் பேர் செல்வதால் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில்கள் வந்து விடுவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுபோன்று கடக்கையில் எதிர்பாராதவிதமாக பயணிகள் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் நிலையேற்படுகிறது. 
அவ்வாறு விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாகக் கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
ரூ.1.50 கோடியில் திட்டமதிப்பீடு: பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2016-இல் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் ரூ.1.50 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டும், திட்ட மதிப்பீடு குறைவாக இருப்பதாகக் கருதி ஒப்பந்ததாரர்கள் யாரும் எடுக்க முன்வரவில்லை. 
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக சுரங்கப்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, விரைவில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு: இதுகுறித்து, திருவள்ளூரைச் சேர்ந்த சென்னை கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஸ்கரன் கூறியதாவது: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு வரும் பயணிகள் தண்டவாளத்தை கடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒரு சில நேரங்களில் ரயில்கள் வந்து கொண்டிருக்கும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடப்பதால் விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் வேகத்தைக் குறைத்து அல்லது சிறிது நேரம் நின்று செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதனால் ரயில்களும் தாமதமாகச் செல்கின்றன. 
இதையெல்லாம் கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதைப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


* பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2016-இல் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் ரூ.1.50 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டும், திட்ட மதிப்பீடு குறைவாக இருப்பதாகக் கருதி ஒப்பந்ததாரர்கள் யாரும் எடுக்க முன்வரவில்லை. 
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக சுரங்கப்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com