அரக்கோணம் ரயில் நிலைய விரிவாக்கப் பணி: சென்னை-திருப்பதி ரயில் நாளை முதல் ரத்து

அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை -திருப்பதி ரயில் சனிக்கிழமை (ஏப். 21) முதல் திங்கள்கிழமை (ஏப்.23) வரை ரத்து செய்யப்படுகிறது

அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை -திருப்பதி ரயில் சனிக்கிழமை (ஏப். 21) முதல் திங்கள்கிழமை (ஏப்.23) வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், இந்த நாள்களில் சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் பெருமளவில் ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம் உள்ளிட்ட பணிக்களுக்காக சென்னை சென்ட்ரல் -திருத்தணி வரை சனிக்கிழமை காலை 10, 11.45 மணி அளவில் செல்லும் மின்சார ரயில்கள் அரக்கோணம் வரை மட்டுமே செல்லும். அதேபோல், திருத்தணி-சென்னை சென்ட்ரல் இடையே 13.15, 14.30 மணிக்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல், இந்த வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை (22) தேதி முதல் புதன்கிழமை (25) வரை செல்லும் பல்வேறு மின்சார ரயில்கள் ரத்தும், வழித்தட மாற்றமும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை -திருப்பதி ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி இடையே சனிக்கிழமை (ஏப். 21) முதல் திங்கள்கிழமை (ஏப். 23) வரை பிற்பகல் 14.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் (எண் 16053) ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், திருப்பதி -சென்னை சென்ட்ரல் இடையே சனிக்கிழமை (ஏப். 21) முதல் திங்கள்கிழமை (ஏப். 23) வரை காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயில் (எண் 16054) திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படும். 
சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை மதியம் 12.20 மணி அளவில் இயக்கப்படும் மும்பை சிஎஸ்எம்டி விரைவு ரயில் (எண் 11042), 1 மணி 30 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.
அரக்கோணம் -வேலூர் பயணிகள் ரயில் ரத்து: அரக்கோணம் - வேலூர் கன்டோன்மென்ட் இடையே திங்கள்கிழமை (ஏப். 23) முதல் புதன்கிழமை (ஏப். 25) பிற்பகல் 13.05 மணி அளவில் இயக்கப்படும் ரயில்கள் (எண் 56013) ரத்து செய்யப்படுகின்றன. 
அதேபோல், வேலூர் கன்டோன்மென்ட்-அரக்கோணம் இடையே திங்கள்கிழமை (ஏப். 23) முதல் புதன்கிழமை (ஏப். 25) காலை 9.40 மணி அளவில் இயக்கப்படும் ரயில்கள் (எண் 56014) ரத்து செய்யப்படுகின்றன. 
இதேபோல், சனிக்கிழமை (ஏப். 21) முதல் புதன்கிழமை (ஏப். 25) வரை சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் பல்வேறு விரைவு ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com