பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் பஜாரில் போகி மேளம், மஞ்சள் கிழங்கு, கரும்பு மற்றும் மாடுகளுக்கான அலங்காரம் செய்வதற்கான பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. 
பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் பஜாரில் போகி மேளம், மஞ்சள் கிழங்கு, கரும்பு மற்றும் மாடுகளுக்கான அலங்காரம் செய்வதற்கான பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. 
தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, செவ்வாய்க்கிழமை வரை கொண்டாடப்படவுள்ளது. 
இதற்கான பொருள்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொங்கலுக்கான கரும்பு, மஞ்சள்கிழங்கு, தேங்காய், பூ வகைகள் , பழங்கள், மாடுகளுக்கு தேவையான வண்ணங்களில் மூக்கணாங்கயிறு, சலங்கை, கொம்பு குப்பி, பல வகை வண்ணங்களில் பூச்சு கலவைகள் மற்றும் பல பொருள்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் குவிந்துள்ளனர். 
கடந்தாண்டை விட குறைவான விலைக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். 
இதுகுறித்து செங்கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து வியாபாரி காரிச்சாமி கூறுகையில், இந்த முறை செங்கரும்பு கட்டுகளை பண்ருட்டி, திண்டிவனம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். 
இதற்கு கரும்பு வெட்டு, ஏற்றுக் கூலி மற்றும் லாரி வாடகை கொடுத்து வாங்கி வந்து வந்து விற்கிறோம். தற்போது, வளர்ந்த நிலையில் உள்ள கரும்பு கட்டு ரூ.400 முதல் ரூ.450 வரையில் விற்பனை ஆகிறது. 
அதேபோல், நன்றாக மழை பெய்துள்ளதால் மஞ்சள் கொத்துகள் வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறைவாகவே கிடைக்கின்றன. 
இந்த நிலையில் தங்கள் மகள்களுக்கு பொங்கல் சீர்வரிசை பொருள்கள் கொடுப்போர் கட்டுக் கட்டாக கரும்பை வாங்கிச் செல்கின்றனர். அதேசமயம் கிராமங்களில் டிராக்டர்களில் நேரிடையாகச் சென்று விற்பனை செய்வதால் கிராமங்களில் இருந்து நகருக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
கண்காணிப்பு கேமரா: தைப்பொங்கல் பொருள்கள் வாங்க வரும் கிராம மக்கள் பஜார் பகுதிகளில் குவிந்து வருகின்றனர். 
இதுபோன்ற கூட்ட நெருக்கடியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி ஜேப்படி திருடர்கள் பிக்பாக்கெட் அடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 
இதைக் கண்காணிப்பதற்காக பேருந்து நிலையம், திருவள்ளூர் -திருத்தணி, திருவள்ளூர்-ஆவடி , திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை மற்றும் பஜார், மார்க்கெட் பகுதி, தேரடி வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிகத்தெளிவாக கண்காணிக்கும் வகையில் கணிப்பொறி யுடன் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
இதேபோல், முக்கிய சந்திப்புகளில் ரோந்து வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அவ்வப்போது தங்கள் பொருள்களை யும், உடைமைகளையும் பொதுமக்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளவும் போலீஸார் எச்சரிக்கை செய்து அறிவுறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com