விவசாயக் கிணறுகளுக்கு நீர்வரத்து:  கொசஸ்தலை, கூவம் ஆறுகளில் புதிய தடுப்பணைகள்: குறை தீர் கூட்டத்தில் வருவாய் அலுவலர் தகவல்

விவசாயக் கிணறுகளுக்கு நீர்வரத்து ஏற்படும் வகையில் கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறுகளில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தெரிவித்தார். 

விவசாயக் கிணறுகளுக்கு நீர்வரத்து ஏற்படும் வகையில் கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறுகளில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தெரிவித்தார். 
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். 
இதில்,  இங்குள்ள விவசாயிகளிடம் கால்நடைகள் அதிகமாக உள்ளன. இவை சாலையில் சுற்றித் திரிவதாகக் கூறி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் பிரச்னைகள் உள்ளன. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும், இதுவரையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். விளைநிலங்களுக்கு அருகே இறால் மற்றும் வண்ணமீன் பண்ணைகள் அமைந்துள்ளதால் மாசு ஏற்பட்டு பயிர் சாகுபடி பாதிக்கும் நிலையுள்ளது. 
இவற்றை அகற்றவும், விவசாயக் கிணறுகளுக்கு நீர் வரத்து ஏற்படுத்தும் வகையில் கொசஸ்தலை, கூவம் ஆறுகளில் தடுப்பணை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
மேலும், விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்கள் விவசாயிகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் விடுத்தனர்.  
இதைத்தொடர்ந்து,  மாவட்ட வருவாய் அலுவலர் பேசியது: இக் கூட்டத்தில் விவசாயிகள் குறிப்பிட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மேய்ச்சல் நில ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவை அகற்றப்படும். மேலும், ஏற்கெனவே கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறுகளில் விவசாயக் கிணறுகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில் தடுப்பணை அமைக்கும் திட்டம் உள்ளது. இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப் ராவ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் முத்துதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com