காமராஜர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூரில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது  திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

திருவள்ளூரில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது  திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
தமிழகம் முழுவதும் ஏழை எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதற்காக கிராமங்கள் தோறும் பள்ளிகள் தொடங்கக் காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆவார். அதனால் அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு  அறிவித்து ஆண்டுதோறும் ஜூலை15-இல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 116-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல்  கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ஏ.சி.சிதம்பரம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது, நிர்வாகிகள் வெங்கடேசன், மோகன்தாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் ஜி.என்.சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.எ.ஏழுமலை தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலகமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் பொன்னுவேல் தலைமையில் பேரணியாக வந்து திருவள்ளூர் ஜி.என்.சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

வெண்மனம்புதூர்  அரசு உயர் நிலைப்பள்ளியில்...
திருவள்ளூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜரின் 116ஆவது பிறந்த நாள் விழாவான கல்வி வளர்ச்சி நாளையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
திருவள்ளூர் அருகே வெண்மனம் புதூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜரின் 116ஆவது பிறந்த  நாளான கல்வி வளர்ச்சி நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காசி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர் தேவி முன்னிலை வகித்தார். இதில் பள்ளி வளாகத்தில் காமராஜர் உருவப் படத்தை தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மாலை அணிவித்து சிறப்புரை வழங்கினார். இதையொட்டி நடத்தப்பட்ட பாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், எழுது பொருள்களும் வழங்கப்பட்டன.     

கும்மிடிப்பூண்டி பகுதிகளில்...
கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காமராஜரின் 116ஆவது பிறந்த நாள் விழாவை பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் கொண்டாடின. அரசு பள்ளிகளில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் காமராஜரின் 116ஆவது பிறந்த நாளையொட்டி, அவருடைய சிலைக்கு காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு பொது நல அமைப்புகளும் மரியாதை செலுத்தின.
அதேபோல கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கல்வி வளர்ச்சி நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அதேபோல், கும்மிடிப்பூண்டி நாடார் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட காமராஜர் பிறந்த நாளையொட்டி பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி வட்டார நாடார் சங்கத் தலைவர் வி.ஆறுமுகப்பாண்டியன் தலைமை வகித்தார். கே.பி.நல்லதம்பி வரவேற்றார்.
பின்னர் காமராஜர்  திருமண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது  காமராஜர் ஆட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக உருவாக்கப்பட்ட மதிய உணவு திட்டம் குறித்த நாடகத்தை மாணவர்கள் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

ரஜினி மக்கள் மன்றம்...
செங்குன்றம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் மன்ற நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்குன்றத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, ஞாயிற்றுகிழமை திருவள்ளூர் ரஜினி மக்கள் மன்றம் அலுவலகத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ரஜினிகண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாவட்ட துணைச் செயலாளர்கள் அன்சாரி, வெங்கடேஷ், செங்குன்றம் நகர செயலாளர் யூசப், சோழவரம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதைத் தொடர்ந்து, செங்குன்றம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் அரசுப் பள்ளிக்கும் உதவித்தொகை வழங்கினர். 

காங்கிரஸ் சார்பில்...
காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்கள், அன்னதானம், மற்றும் போட்டிகள் நடைபெற்றன.
திருவள்ளூர் மத்திய மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக காமராஜரின் 116ஆவது பிறந்த நாள் விழாவில், மாவட்டத் தலைவர் எஸ்.மகீந்திரன், துணைத் தலைவர் கிரிதர், மாதவரம் பகுதி தலைவர் வெங்டேசன் ஆகியோர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு, இடிமா அருள், லதா சுந்தரம், ஜெயவேலு, தியாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுந்தரம், சகாதேவன் ஆகியோர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். 

பாடியநல்லூரில்...
பாடியநல்லூர் வட்டார நாடார் சங்க முப்பெரும் விழா ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜரின் 116ஆவது பிறந்த நாள் விழா, சங்கத்தின் 50ஆவது ஆண்டு பொன் விழா மற்றும் சங்கத்தின் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை, சங்க ஆலோசகர் வி.எஸ்.சுப்பிரமணி நாடார் கொடியேற்றி தொடங்கி வைத்தார். சங்கத் தலைவர் ஆர்.குணபாண்டிய நாடார், காமராஜர் உருவப் படத்தை திறந்து வைத்தார். 
விழாவில், இந்த ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். 
பாமக சார்பில்...
பாமக சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை  அணிவித்து அனைவருக்கும் அன்னதானம் செய்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் ரெட்டை ஏரி அருகே பாமக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, மாவட்டச் செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கியதோடு, அன்னதானமும் செய்தனர். இந்த விழாவில், பாமக நிர்வாகிகள் தே.சண்முகம், ராஜேந்திரன், லிங்கமூர்த்தி, கதிர்வேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
பாஜக வர்த்தக அணி சார்பில்...
 பாஜக வர்த்தக அணி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாஜக வர்த்தக அணி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, மாவட்ட இணை அமைப்பாளர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 15) நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, செங்குன்றம் பஜார் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

திருத்தணியில் அரசுப் பள்ளிகளில்...
காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன.
திருத்தணி அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 116ஆவது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. 
காலை 10 மணிக்கு நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி காமராஜர் கல்வி அறக்கட்டளை தலைவர் வினோத் கலந்துகொண்டு காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பள்ளி மாணவிகளிடையே பேச்சு, கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் மற்றும் வில்லுப்பாட்டு உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
இதேபோல், திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், திருத்தணி காமராஜர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சுப்பிரமணி, முருகன், ஆசிரியர்கள் சேஷாசலம், சக்கரபாணி, குரைஷா, உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வர் ராவ் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com