விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு: கொசஸ்தலை ஆற்றில் ரூ.7.07 கோடியில் தடுப்பணை பணி தொடக்கம்

கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கவும், விவசாயிகளின் பம்ப்செட் கிணறுகளுக்கு நீர்வரத்து ஏற்படுத்தும் நோக்கத்திலும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.7.07 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி

கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கவும், விவசாயிகளின் பம்ப்செட் கிணறுகளுக்கு நீர்வரத்து ஏற்படுத்தும் நோக்கத்திலும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.7.07 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களின் பாசன வசதிக்கு கொசஸ்தலை ஆறுதான் நீர் ஆதாரமாகும்.
அதோடு தாமரைப்பாக்கம் ஏரி, வல்லூர் ஏரி, வெளியகரம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றுக்கும் கொசஸ்தலை ஆறு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும், இந்த ஆற்று வழித்தட கரையோரங்களில் உள்ள கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. அதையடுத்து சென்னை எண்ணூர் வரையில் சென்று வங்கக் கடலில் கலக்கிறது.
இந்நிலையில், மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு, அதிகமான நீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகும் சூழ்நிலையிருக்கிறது. அதனால், கிராமங்களுக்கும், விவசாயிகளின் பம்ப்செட் நீர் ஆதாரத்திற்கும் வழியேற்படுத்தும் வகையில் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளநீரைத் தடுப்பதால், அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்பு ஏற்படும். அதனால், தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் ஆட்டரம்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ரூ.7.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. அதைத்
தொடர்ந்து, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு (கொசஸ்தலை ஆறு) வடிநில கோட்டம் சார்பில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதோடு, ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளநீரை தேக்கி வைக்க முடியும்.
இதனால், பாசனத்திற்கு தட்டுப்பாடியின்றி நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இப்பணியை நிகழாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com