தமிழக மக்கள் மேடை அமைப்பினர் பிரசாரம்

மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும், மக்கள் மத்தியில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தெரிவிக்கும் வகையிலும்

மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும், மக்கள் மத்தியில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தெரிவிக்கும் வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகளின் கூட்டமைப்பான தமிழக மக்கள் மேடை சார்பாக கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் நடத்தப்பட்டது.
மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், திருவள்ளுர் மாவட்டத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்; மணல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும்; ஏரிகளைப் பாதுகாக்கும் வகையில் சவுடு மண் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும்; ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்; நூறு நாள் வேலையை 200 நாள்களாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.350-வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் மேடை சார்பில் பிரச்சாரம் நடத்தப்பட்டது.
பெரியபாளையம் அம்பேத்கர் நகரில் தொடங்கிய இந்தப் பிரச்சாரம் வண்ணாங்குப்பம், தண்டலம், காக்கவாக்கம், மேல்மாலிகைப்பட்டு, ஆவாஜிபேட்டை, மாலந்தூர், வெங்கல்,தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்தப் பிரச்சாரத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் தலைமை வகித்தார்.
இதில் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி கே.செல்வராஜ்,மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ரமா, மாவட்டப் பொருளாளர் ஏ.பத்மாவதி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வட்டத் தலைவர் குமார்,செயலாளர் பி.அருள், சிஐடியூ நிர்வாகிகள் சி.பாலாஜி, ரமேஷ்,முனுசாமி, வாலிபர் சங்கத்தின் தலைவர் மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது விவசாயிகளுக்கு எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றுவோம்; ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கின் மூலம் ரூ.15 லட்சம் வழங்கப்படும்; ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பிரதமர் மோடி கொடுத்தார். நான்கு ஆண்டு ஆட்சி நிறைவடைந்த நிலையிலும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி அளவிற்கு கடன் தள்ளுபடியை மத்திய அரசு செய்துள்ளது என்று இந்த அமைப்பினர் பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com