காப்பீட்டுத் தொகை கிடைக்க புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்க் காப்பீட்டுத் தொகை அனைவருக்கும் கிடைக்கும் நோக்கில் வேளாண்மை அதிகாரிகளும், புள்ளிவிவரத்

பயிர்க் காப்பீட்டுத் தொகை அனைவருக்கும் கிடைக்கும் நோக்கில் வேளாண்மை அதிகாரிகளும், புள்ளிவிவரத் துறையினரும் அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என்று  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். இதில் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:
இதில் பங்கேற்றுப் பேசிய விவசாயி ஒருவர், இந்த மாவட்டத்தில் பயிர் செய்துள்ள விவசாயிகளின் அனைத்து விவரங்களையும் வேளாண்மை, புள்ளியியல் துறை ஆகியவற்றின் மூலம் அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். அதற்கு முன்னதாக எந்தெந்த பயிர் பாதிக்கப்பட்டதில் பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பதை விவரமாக எடுத்துரைக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் காப்பீடு செலுத்திய நிலையிலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
மேலும், மற்றொரு விவசாயி கூறுகையில், "தற்போதைய நிலையில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஏரிகளில் நீர் சேகரிக்கும் வகையில் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், நீர் ஆதாரத்தை சேகரிக்க முடியாத நிலையில் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும். இம்மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்ப்போர் அதிகளவில் உள்ளனர். 
அதனால், ஆவடி, திருவள்ளூர் பகுதியில் மேய்ச்சல் நிலங்களை தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துளளனர். அதை மீட்டு மீண்டும் கால்நடைகளுக்கான மேய்ச்சலுக்கான நிலத்தை உருவாக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கூறியது:
பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்தும், கிடைக்காமல் விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்புத் தொகை வழங்கப்படும். மேலும் நீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆற்று வழித்தடங்களில் நீரை சேகரிக்க ஆய்வு செய்து தடுப்பணைகள் அமைக்கப்படும்.
அதேபோல், மேய்ச்சல் நிலங்கள் எங்கெங்கு உள்ளன என்பது தொடர்பாக வருவாய்த் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும், நேரடிக் கொள்முதல் நிலையம் திறக்கவும், மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கரும்பு நிலுவைத் தொகை அளிக்கவும், அங்கீகாரமற்ற வண்ண மீன் மற்றும் இறால் மீன் பண்ணைகளை அகற்றுதல், உரம் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். 
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி உரக்குடில் மூலம் தயார் செய்யப்பட்ட இயற்கை   உரங்களை விவசாயிகளுக்கு அவர் இலவசமாக வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com