முடிவுக்கு வந்தது மீனவர்களின் போராட்டம்   

பழவேற்காட்டில் உள்ள முகத்துவார பகுதியை தூர்வாரக் கோரி 2 நாள்களாக நடைபெற்ற மீனவர்களின் போராட்டம்

பழவேற்காட்டில் உள்ள முகத்துவார பகுதியை தூர்வாரக் கோரி 2 நாள்களாக நடைபெற்ற மீனவர்களின் போராட்டம் மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில், கடலோரப் பகுதியான பழவேற்காட்டில்  20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், கடல் மற்றும்  இந்தியாவில் இரண்டாவது பெரிய ஏரியாக விளங்கும், பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள முகத்துவாரப் பகுதியில், 6 மணி நேரத்துக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் சென்று வரும். தற்போது முகத்துவாரம் முழுவதும் மணல் திட்டுக்களால் அடைந்து கிடப்பதால், கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் செல்லும் சுழற்சி முறையில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பழவேற்காடு ஏரியில் மீன் வளம் குறைந்தது. இங்குள்ள முகத்துவாரப் பகுதியை சீரமைக்கக் கோரி அப்பகுதி மீனவ மக்கள் அரசுக்கு  நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை நிறைவேற்றப்படவில்லையாம். இந்நிலையில், முகத்துவாரப் பகுதியில் அதிக அளவில் மணல் திட்டுக்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அப்பகுதியில் மீன் பிடித்தொழில் செய்து வருவோர் அவதிப்பட்டு வந்தனர். 
இதனிடையே பழவேற்காட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்ட படகுகளில் ஏரியும்-கடலும் இணையும் இடத்துக்குச் சென்று முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி போராட்டம் நடத்தினர்.  அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. 
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்
கிழமை பழவேற்காடு கடை வீதியில் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகளும் கடைகளை அடைத்து விட்டு, போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், பொன்னேரி 
எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com