கரும்பு நிலுவைத் தொகை: விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை

கரும்பு நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது.
கரும்பு நிலுவைத் தொகை: விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை

கரும்பு நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது.
போளூர் அடுத்த கரைப்பூண்டி ஊராட்சியில் உள்ள தரணி சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு கரும்பு பாக்கித் தொகை ரூ.43 கோடியை நிர்வாகம் நிலுவைத் தொகை வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், போளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தொடங்கி சர்க்கரை ஆலை வரை நிலுவைத் தொகை வழங்கவேண்டி பின்னோக்கிய நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது.
 இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் தே.புவனேஸ்வரி, டிஎஸ்பி கோட்டீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தரணி சர்க்கரை ஆலை நிர்வாகிகளையும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.
 இதையடுத்து, பின்னோக்கிய நடைப்பயணத்தை கரும்பு விவசாயிகள் சங்கம் வாபஸ் பெற்று கலைந்துசென்றனர். பின்னர், திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தே.புவனேஸ்வரி தலைமையில் தரணி சர்க்கரை ஆலை பொதுமேலாளர் கந்தசாமி, காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் 10 பேர் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
 கூட்டத்தில் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.5.6 கோடி விவசாயிகளுக்கு தரவேண்டியுள்ளது. இந்தத் தொகையில் ரூ.3 கோடியை தீபாவளிக்குள் வழங்குவதாகவும், மீதமுள்ள ரூ.2.6 கோடியை நவம்பர் இறுதிக்குள் தருவதாகவும் ஒப்புக்கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கை மற்றும் ஆலை குறைபாடுகளை நிர்வாகத்திடம் விவசாயிகள் நேரடியாக தெரிவிக்கலாம் என தீர்மானம் இயற்றப்பட்டது.
கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலை துணைப் பொதுமேலாளர் ராஜி, கரும்பு கோட்ட அலுவலர் ஜோசப் செல்வகுமார், விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com