திருவண்ணாமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கழிவுநீர்க் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகரில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் காலை வரை தொடர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள மாந்தோப்பு, செட்டிகுளமேடு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்தது.
சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. தற்போது 2-ஆவது முறையாக மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கழிவுநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாலேயே மழைநீர் வீடுகளுக்குள் புகுவதாகவும், எனவே, இங்குள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், மழைநீர் வீடுகளுக்குள் செல்லாதவாறு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு: திருவண்ணாமலை - வேலூர் சாலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளைப் பிடித்தபடி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, வட்டாட்சியர் ஆர்.ரவி மற்றும் போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இந்தப் பகுதியில் அடிக்கடி மழைநீர் வீடுகளுக்குள் புகுவதால், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மாந்தோப்பு, செட்டிகுளமேடு, திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி
உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com