தொடர் மழையால் ஏரிகள் நிரம்பின: சாலைகள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பல ஏரிகள் நிரம்பின.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பல ஏரிகள் நிரம்பின.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்தன.
குடிநீருக்குப் பஞ்சம்: தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், ஏரிகள், குளங்கள் வற்றின. குடிநீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். குடிநீர் கேட்டு ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்கள், அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களும் நடைபெற்றன.
கொட்டித் தீர்த்த மழை: இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியர் அலுவலகம், கிரிவலப்பாதை, அடி அண்ணாமலை, அத்தியந்தல், கீழ்பென்னாத்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த  மழை பெய்தது.
ஏரிகள் நிரம்பின: திருவண்ணாமலையில் மட்டும் விடாமல் 102.5 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரம்பியது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது.
இந்தத் தண்ணீர் ஏரிக்கு எதிரே உள்ள குறிஞ்சி நகரில் சென்று தேங்கியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடி ஏரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
பல கோடி ரூபாய் மதிப்பு சாலைகள் சேதம்: இந்நிலையில், மழையால் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெருவில் ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில் பின்புறம் உள்ள மலையில் இருந்து வந்த தண்ணீர் சின்னக்கடைத் தெரு சாலைகளில் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரால் பயணிகள் தவித்தனர். திருவண்ணாமலை - போளூர் சாலை, ஸ்ரீபச்சையம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலை ஆகியவை பலத்த மழையால் முற்றிலும் சேதமடைந்தன. திருவண்ணாமலை பே கோபுரம் 6-ஆவது தெருவில் போடப்பட்ட தார்ச்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதேபோல, மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட சாலைகள் எல்லாம் பலத்த மழையால் சேதமடைந்துள்ளன.
குளங்களில் தண்ணீர் தேங்குகிறது: திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டன. இந்தக் குளங்கள் மட்டுமில்லாமல், தூர்வாராத ஏரி, குளங்கள், தாழ்வான பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com