பண்டிகை தினங்களில் இயக்கப்படாததற்கு எதிர்ப்பு: அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

வந்தவாசி அருகே உள்ள பெரிய குப்பம் கிராமம் வழியாகச் செல்லும் அரசுப் பேருந்தை பண்டிகை தினங்களில் வேறு வழித்தடங்களில் திருப்பி விடுவதற்கு

வந்தவாசி அருகே உள்ள பெரிய குப்பம் கிராமம் வழியாகச் செல்லும் அரசுப் பேருந்தை பண்டிகை தினங்களில் வேறு வழித்தடங்களில் திருப்பி விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முறையாக பேருந்தை இயக்கக் கோரியும் அந்தக் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்டது பெரியகுப்பம் கிராமம். வந்தவாசியிலிருந்து தெய்யாறு, பெரியகுப்பம், வேப்பங்கரணை, மேல்மருவத்தூர் வழியாக சென்னைக்கு காலை மற்றும் பிற்பகல் என இருமுறை அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்தை சரிவர இயக்கக் கோரி, பெரியகுப்பம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காலை அந்தக் கிராமத்துக்கு வந்த பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமம் வழியாக இந்தப் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அமாவாசை, பௌர்ணமி, பொங்கல் உள்ளிட்ட திருவிழா நேரங்களில் இந்தப் பேருந்தும் எங்கள் கிராம வழித்தடம் வழியாக இயக்கப்படுவதில்லை. மாறாக வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே, எங்கள் கிராமம் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்தை சரிவர இயக்க வேண்டும். மேலும், தற்போது 2 நடைகள் இயக்கப்படுவதை 4 நடைகளாக உயர்த்த வேண்டும். இதற்காக அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
தகவலறிந்து அங்கு சென்ற தெள்ளாறு போலீஸார் மற்றும் போக்குவரத்துக் கழக பணிமனை பொறியாளர் இஸ்மாயில்ஷெரீப் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் கிராம மக்கள் பேருந்தை விடுவித்தனர். இதையடுத்து, சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக பேருந்து புறப்பட்டுச் சென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com