செய்யாறு அருகே விபத்து பேருந்துகள் நேருக்குநேர் மோதல்: ஓட்டுநர் உள்பட 3 பேர் சாவு

செய்யாறு அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட மூவர் உயிரிழந்தனர். 35 பேர் பலத்த காயமடைந்தனர்.

செய்யாறு அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட மூவர் உயிரிழந்தனர். 35 பேர் பலத்த காயமடைந்தனர்.
வேலூரில் இருந்து திண்டிவனத்துக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து செய்யாறு - வந்தவாசி சாலையில் எச்சூர் கிராமம் அருகே வளைவுப் பகுதியில் வந்த போது, எதிரே வந்தவாசியில் இருந்து செய்யாறு செல்லும் தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் இரு பேருந்துகளின் முன்பகுதி நொறுங்கி பலத்த சேதமடைந்தன. அரசுப் பேருந்தில் பயணித்த செய்யாறு பைங்கினர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் (60) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசுப் பேருந்து ஓட்டுநரான நடுக்குப்பத்தைச் சேர்ந்த மதியழகன் (50), வந்தவாசி நகராட்சியில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றிய ராணிப்பேட்டை வேலுசாமியும் (46) பலத்த காயமடைந்து, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் அங்கு உயிரிழந்தனர். தகவலறிந்த அனக்காவூர் காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர்.
இந்த விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரான துளசிராமன் (28), நடத்துநர் புருஷோத்தமன் (27), திண்டிவனம் அரசுக் கல்லூரி முதல்வர் இளங்கோவன் (57), இளங்காடைச் சேர்ந்த குப்பன் (60), வந்தவாசியைச் சேர்ந்த பாபு (50), சுகன்யா (40), ரமிஜா (35), வள்ளியூர்பாளையத்தைச் சேர்ந்த சம்பத் (65), தட்டச்சேரியைச் சேர்ந்த ரவி (45), புரிசையைச் சேர்ந்த பெருமாள் (42), சோவனந்தலைச் சேர்ந்த விநாயகம் (41), தணிகைமலை (37), வீரம்பாக்கத்தைச் சேர்ந்த செல்லா (36), கம்பனூரைச் சேர்ந்த துரைசாமி (27), மழையூர் புதூரைச் சேர்ந்த பிரகாஷ் (24), எச்சூரைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி விஜயலட்சுமி (16) உள்பட 35 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசபாபதி, செய்யாறு கோட்டாட்சியர் பொன்.கிருபானந்தம், வந்தவாசி வட்டாட்சியர் முரளிதரன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்து குறித்து அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com