ஏக்கருக்கு 10 டன் தர்ப்பூசணி  விளைச்சல்: வறட்சியிலும் லாபம் ஈட்டும் விவசாயி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், ஏக்கருக்கு 10 டன் தர்ப்பூசணி விளைவித்து, அதன் மூலம் சுமார் ரூ.75 ஆயிரம் வரை விவசாயி லாபம் சம்பாதித்து வருகிறார்.
ஏக்கருக்கு 10 டன் தர்ப்பூசணி  விளைச்சல்: வறட்சியிலும் லாபம் ஈட்டும் விவசாயி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், ஏக்கருக்கு 10 டன் தர்ப்பூசணி விளைவித்து, அதன் மூலம் சுமார் ரூ.75 ஆயிரம் வரை விவசாயி லாபம் சம்பாதித்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகிவிட்டன. எனவே, வறட்சியால் காய்ந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் துரிஞ்சாபுரம் ஒன்றியம், வெளுகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.ஆர்.டி.ஏழுமலை, தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் வறட்சியைத் தாங்கி, செழித்து வளரக்கூடிய தர்ப்பூசணியை பயிரிட்டுள்ளார்.
10 ஏக்கர் முழுவதும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, தினமும் 4 மணி நேரம் மட்டும் தண்ணீர் பாய்ச்சுகிறார். தர்ப்பூசணி விதை நட்ட 55 முதல் 60 நாள்களில் முதல் அறுவடை நடைபெறுகிறது. 70-ஆவது நாளில் 2-ஆவது அறுவடை நடைபெறுகிறது. இதன் மூலம் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி நிறைந்த லாபம் பெற்று வருவதாகக் கூறுகிறார் விவசாயி ஏழுமலை.
அருகிலுள்ள விவசாய நிலங்களில் எல்லாம் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து விட்ட நிலையில், நீங்கள் மட்டும் திறம்பட தர்ப்பூசணி சாகுபடி செய்தது எப்படி என்று விவசாயி வி.ஆர்.டி.ஏழுமலையிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
நான் கடந்த 10 ஆண்டுகளாக நெல், வாழை, கரும்பு மற்றும் இதர பயிர்களை பயிரிட்டுப் பார்த்துவிட்டேன். எந்தப் பயிரிலும் போதிய லாபம் கிடைக்கவில்லை. தண்ணீரும் போதுமானதாக இல்லை.
தற்போது என்னுடைய கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிரிட விரும்பினால், ஒரு ஏக்கரில் மட்டுமே நெல் பயிரிட முடியும். மணிலா பயிரிட விரும்பினால், 2 ஏக்கரில் பயிரிடலாம். ஆனால், தற்போது 10 ஏக்கரில் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளேன். 10 ஏக்கரிலும் பகுதி, பகுதியாக தர்ப்பூசணி நட்டு பராமரித்து வருகிறேன்.
சில தினங்களுக்கு முன்பு மூன்றரை ஏக்கரில் பயிரிட்டிருந்த தர்ப்பூசணியை அறுவடை செய்தேன். 35 டன் தர்ப்பூசணி விளைந்தது. ஒரு டன் ரூ.9,100-க்கு விற்பனை செய்தேன். இதன் மூலம் மொத்தம் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 500 கிடைத்தது. உரம், ஆள்களுக்கான கூலி, உழவு, மருந்து என மொத்தம் ரூ.75 ஆயிரம் செலவானது.
செலவு போக மீதி ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் நிகர லாபம் 70 நாள்களில் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னைத் தொடர்பு கொள்ளும் விவசாயிகளுக்கு தர்ப்பூசணி பயிரிடத் தேவையான ஆலோசனைகள், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com